Published : 03 May 2014 10:19 AM
Last Updated : 03 May 2014 10:19 AM

வாக்கு எண்ணுவதில் புதிய நடைமுறை முதல்முறையாக அறிமுகம்: தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பேட்டி

வரும் 16-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, சிறு தவறுகள் கூட ஏற்படாமல் இருப்பதற்காக புதிய நடை முறையை பின்பற்ற இருப்பதாக தலைமை தேர்தல் பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத் தில் நிருபர்களிடம் அவர் வெள்ளிக் கிழமை கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் அறையில் 14 மேசைகள் இருக்கும். அந்த மேசைகளில் எண்ணப் படும் வாக்குகள், ஒவ்வொரு சுற்று முடிவின்போதும் அறிவிக்கப்படும். வழக்கமாக, மொத்தமாக எண்ணப் பட்டுள்ள வாக்குகளின் விவரம்தான் ஒவ்வொரு சுற்று முடிவிலும் அறிவிக்கப் படுவது வழக்கம். அதில் மாற்றம் செய்து, ஒவ்வொரு மேசை யில் எண்ணப்படும் வாக்குகளும் தனித்தனியாக தொகுக்கப் பட்டு, முதல் சுற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

மேசையில் எண்ணப்படும் வாக்குகள், தேர்தல் நுண்பார்வை யாளரால் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கப்பட்டு, தேர்தல் துறைக்கு ஆன்லைனில் தகவல் தெரிவிக்கப்படும். அதன்பிறகுதான், ஒவ்வொரு சுற்று முடிவுகளும் வெளியாகும். அதுமட்டுமின்றி வேட்பாளரின் ஏஜென்டுகளுக்கு மேசை வாக்குகள் பற்றிய விவரங்கள் ஒரு தாளில் கொடுக்கப்படும்.

இதனால், ஒவ்வொரு சுற்று முடிவு அறிவிப்புக்கும் 20 நிமிடம் வரை வழக்கத்தை விட கூடுதலாக நேரம் ஆகும். எனவே முன்பு சொன்னதுபோல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படும்.

ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர்

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் அத்தொகுதி அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் நாடாளு மன்ற தொகுதி ஆகியவற்றின் வாக்குகள் ஒரே இடத்தில் எண்ணப் படுகின்றன. அங்கு மட்டும் 7 மேசைகளில் வாக்குகள் எண்ணப்படும். அதனால் அங்கு முடிவுகள் மேலும் தாமதமாகக்கூடும்.

சென்ட்ரல் குண்டுவெடிப்பு

சென்ட்ரல் குண்டு வெடிப்பை தேர்தலுடன் தொடர்புபடுத்தி பார்க்கத் தேவையில்லை. அதனால் வாக்கு எண்ணும் மையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை. ஏற்கெனவே அனைத்து மையங்களையும் சுழற்சி முறையில் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாத்து வருகிறார்கள். எனினும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஒரு திருமண அழைப்பிதழில் மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் பெயரின் பின்னால் எம்பி என்று அச்சிடப்பட்டிருந்தது தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டம்

வாக்கு எண்ணிக்கை பற்றிய பயிற்சி சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரையில் வரும் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்பிறகு, வாக்கு எண்ணிக்கைக்கு சில நாட்கள் முன்னதாக, அங்கீகாரம் பெற்ற கட்சிப் பிரதிநிதிகளுடன் சென்னையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x