Last Updated : 22 Apr, 2014 09:20 AM

 

Published : 22 Apr 2014 09:20 AM
Last Updated : 22 Apr 2014 09:20 AM

ஆம் ஆத்மியின் பங்களிப்பு என்ன?

பதினாறாவது மக்களவைக்கான தேர்தலில் சில ஆச்சரியங்கள் அரங்கேறியிருக்கின்றன. பல்வேறு துறைகளில், பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்துப் போராடிவரும் மேதா பட்கர், சோனி சோரி போன்ற பல ஆளுமைகள் தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். ஞாநி போன்ற எழுத்தாளர்களும், ஷாஸியா இல்மி போன்ற ஊடகவியலாளர்களும் நிற்கிறார்கள். ஜே. பிரபாகரன் போன்ற காந்தியவாதிகளும் நிற்கிறார்கள். சமூகச் செயல் பாட்டாளர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், இதழிய லாளர்கள் ஆகியோர் இந்த அளவுக்குத் தேர்தலில் நிற்பது இதுவே முதல்முறை. இவர்கள் சுயேச்சையாக அல்லாமல் கையில் துடைப்பத்தை ஏந்தி ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் நிற்கிறார்கள் என்பதும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சம்.

எதன் அடிப்படையில்?

இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் சமூக மாற்றத்துக்காகப் போராடிவருபவர்கள். அதற்காகப் பல இன்னல்களைச் சந்தித்தவர்கள். அரசியல் கட்சிகளைக் கடுமையாக விமர்சிப்பவர்கள். தேர்தல் அரசியலைத் தமது வியூகத்தின் முக்கிய அம்சமாக இதுவரை கருதாதவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் தேர்தலில் வெற்றிபெறு வதற்கான தனிப்பட்ட செல்வாக்கும் இல்லாதவர்கள். இத்தகைய ஆளுமைகளை இவ்வளவு பெரும் எண்ணிக் கையில் தேர்தல் களத்தில் இறக்கிய சக்தி எது?

தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆகியவற்றிலிருந்து விலகி இவர்கள் தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். பண பலம், அதிகார பலம், தொண்டர் பலம், விசுவாச வாக்கு வங்கிகளின் பலம், சாதி, மத ஆதரவின் பலம், கூட்டணி பலம், களம் கண்ட அனுபவத்தின் பலம் என எந்த வலுவும் இல்லாமல் இவர்கள் எப்படிக் களத்தில் நிற்கிறார்கள்? இவர்களுக்கான இணைப்புப் புள்ளியாக அல்லது மையமாக ஆம் ஆத்மி விளங்குவது எப்படி?

தூய நிர்வாகம்

வலதுசாரி, இடதுசாரி என ஆம் ஆத்மியை வகைப் படுத்திவிட முடியாது. இந்தியாவைப் பண முதலைகளின் பிடியிலிருந்தும், ஊழலில் ஊறித் திளைக்கும் அரசியல் பண்பாட்டிலிருந்தும் மீட்க வேண்டும் என்பதே ஆம் ஆத்மியின் பிரதான செயல்திட்டம். இட ஒதுக்கீடு, நதிகள் இணைப்பு, பழங்குடியினர் இடப்பெயர்ச்சி, நக்சலைட்டுகள் போராட்டம், அணு உலைகள் உள்ளிட்ட பல சிக்கலான பிரச்சினைகளுக்கு ஆம் ஆத்மியிடம் தெளிவான நிலைப்பாடுகள் இல்லை என்றாலும், வெளிப்படையான தூய நிர்வாகம் என்பதே இன்று முக்கியமானது என்னும் ஆம் ஆத்மியின் குரலைப் பலரும் எதிரொலிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், பல்வேறு சிக்கலான பிரச்சினைகளை முன்வைத்துப் போராடிவரும் மேதா பட்கர் போன்றவர்கள் இணைந்துகொள்வதற்கு இந்தக் காரணம் போதுமா என்பது முக்கியமான கேள்வி.

போதாது என்பது அவர்களுக்கும் தெரிந்தே இருக்கும். ஒற்றைப் பரிமாணப் பார்வையையும் ஒற்றை கோஷத்தையும் அடிப்டையிலேயே மறுக்கும் பல சமூகப் போராளிகளும் அறிவுசார் செயல்பாட்டாளர்களும் ஆம் ஆத்மியின் எளிய ஒற்றைக் குரலை ஏற்று களத்தில் நிற்க வாய்ப்பு இல்லை என்பது வெளிப்படை. எனில், எதன் அடிப்படையில் நிற்கிறார்கள்?

ஆம் ஆத்மி ரட்சகரா?

இந்த ஆளுமைகள் பெரும்பாலும் கட்சி சார்பற்றவர்கள். கட்சிகளின் போக்குகள், கூட்டணி நிலவரங்கள், வாக்காளர்களின் போக்குகள் ஆகியவைகுறித்து நன்கு அறிந்தவர்கள். ஆம் ஆத்மியின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் இவர்கள் அறிவார்கள். எந்தக் கட்சியுமே இந்தியாவின் பன்முகப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைய முடியாது என்பதையும் இவர்கள் உணர்ந்திருப்பார்கள். ஒரு ரட்சகர் வந்து இந்த நாட்டைக் காப்பாற்றுவார் என்று நம்புவதும் ஒரு கட்சி எல்லாவற்றையும் சரிப்படுத்திவிடும் என்று நம்புவதும் ஒன்று அல்லதான். ஆனால், ஒரு கட்சியின் மீது ரட்சகர் படிமத்தை ஏற்றிப் பார்ப்பது கற்றுக்குட்டித்தனமான அரசியல் பார்வை என்பது இவர்கள் அறியாததல்ல. எனில், ஏன் இவர்கள் ஆம் ஆத்மியைத் தங்களுக்கான போராட்ட அடையாளமாகத் தேர்ந்துகொண்டார்கள்?

ஆம் ஆத்மிக்குக் கிடைக்கக்கூடிய வாக்குகளின் தன்மையை ஆராய்ந்தால் இந்த அம்சத்தை விளங்கிக்கொள்ள முடியும். விசுவாச வாக்குகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இந்தத் தேர்தல் களம் மோடி ஆதரவு, மோடி எதிர்ப்பு என இரு கூறாகப் பிரிந்து நிற்பதைப் பார்க்க முடிகிறது. நாட்டின் இரு பெரும் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸால் மோடிக்கு மாற்றாக ஒரு ஆளுமையையோ வலுவான வியூகத்தையோ முன்வைக்க முடியவில்லை. இந்நிலையில், இந்த இரு கட்சிகளையும் விரும்பாதவர்களுக்கான மாற்று என்ன? இடதுசாரிக் கட்சிகளும் பல்வேறு மாநிலக் கட்சிகளும்தான். ஆனால், இந்த ஆளுமைகள் இந்தக் கட்சிகளுடன் தங்களை இணைத்துக்கொள்ளாமல் ஆம் ஆத்மியுடன் இணைந்து நிற்பதற்கான காரணம் என்ன?

மாற்றுக்கான தேடல்

ஆம் ஆத்மி என்பது மாற்றத்துக்கான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. பிரதானக் கட்சிகளின் செயல்பாடுகள்மீது அதிருப்தி அடைந்துள்ள மக்கள், எப்போதுமே மாற்று ஏற்பாடுகளைத் தேடியபடி இருப்பார்கள். இந்தத் தேடல்தான் புதிய கட்சிகளுக்கான தேவையை உருவாக்கி, அவற்றின் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்துகிறது. தமிழகத்தில் பிரதானக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் முதலான கட்சி களை ஆதரிக்க விருப்பமில்லாதவர்கள் மாற்று சக்தியாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்ட தே.மு.தி.க-வுக்கு வாக்களித்ததை 2006 தேர்தலில் பார்த்தோம். இன்று காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி தன்னை முன்னிறுத்திக்கொண்டுள்ளது. அதே வியூகத்தின் அடிப்படையில் அது ஒரு தேர்தலைச் சந்தித்துக் கணிசமான வெற்றியும் பெற்றுக்காட்டியது. எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் ஊழலற்ற, வெளிப் படையான நிர்வாகம், பெருநிறுவனங்களின் பிடியிலிருந்து அரசாங்கத்தை விடுவித்தல் என்பன போன்ற கொள்கைகளின் அடிப்படையில் அந்தக் கட்சி தேர்தலைச் சந்திக்கிறது.

இரு பெரும் கட்சிகளை விரும்பாதவர்களின் புகலிடமாக இன்று ஆம் ஆத்மி உள்ளது. கட்சிகளின் மீதான பொது அதிருப்தியின் அடையாளமாகவும் வடிகாலாகவும் உள்ளது. மாற்றம் காண விழைபவர்களின் புதிய பரிசோதனைக் களமாகக் காட்சியளிக்கிறது. இதுதான் மேதா பட்கர் போன்றவர்களை ஈர்க்கும் அம்சமாக இருக்க முடியும்.

ஆம் ஆத்மி இருக்கும் இந்த இடத்தில் இடதுசாரிக் கட்சிகளும் பல்வேறு மாநிலக் கட்சிகளும் இருந்திருக்க முடியும். ஆனால், பல்வேறு காரணங்களால் அப்படி இல்லை என்பதே யதார்த்தம். விளைவு, மாற்று சக்தியின் ஒற்றை அடையாளமாக இன்று ஆம் ஆத்மி இருக்கிறது. அந்தக் கட்சிக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் மாற்றுக்கான வாக்காகவே கொள்ள வேண்டும். அந்த வாக்குகளின் எண்ணிக்கைதான் நாளைய மாற்று சக்திகளின் அஸ்திவாரமாக அமையும்.

இந்த அஸ்திவாரத்தை மனதில் கொண்டே இந்த ஆளுமைகள் ஆம் ஆத்மியின் சார்பில் களம் இறங்கியிருக் கிறார்கள் என்று கருதலாம். தேர்தல் அரசியல் மூலம் அரசியல் அதிகாரம் பெற்று மாற்றத்தை ஏற்படுத்த முனைபவர் களுக்கான இடத்தை ஆம் ஆத்மியின் சார்பில் களத்தில் நிற்பவர்களும் உறுதிசெய்கிறார்கள். இவர்கள் வெல்லலாம் அல்லது தோற்கலாம். ஆனால், இவர்களுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் மாற்றத்துக்கான வாக்கு. மாற்றுச் சக்திகளை விரும்புபவர்களின் வாக்கு. இந்த வாக்குகளின் கூட்டுத்தொகை இன்றைய இந்தியாவில் மாற்றத்தை விரும்புபவர்களின் எண்ணிக்கையாகக் கருதப்படலாம். வருங்காலத்தில் தேர்தலின் மூலம் நாட்டில் மாற்றம் ஏற்படுத்த விரும்புபவர்களுக்கான முன்னுதாரணமாகவும் இவர்களது போட்டியும் இவர்கள் பெறும் வாக்குகளும் அமையலாம்.

இதுவே, ஆம் ஆத்மியின் ஆகச் சிறந்த பங்களிப்பாக இருக்கும். இந்தப் பங்களிப்பு கணிசமானதாக இருந்தால் இதுவே இந்தத் தேர்தலின் முக்கியமான தாக்கமாக இருக்கும்.

- தொடர்புக்கு: aravindan.di@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x