Published : 26 Apr 2014 05:46 PM
Last Updated : 26 Apr 2014 05:46 PM
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 73.67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். 39 தொகுதிக ளிலும் இறுதி வாக்குப்பதிவு பட்டி யலையும் அவர் வெளியிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பிரவீண்குமார் சனிக்கிழமை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 24-ம் தேதி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. அன்று நள்ளிரவு 1 மணியளவில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தகவல் கிடைக்கப்பெற்றது. சிறு தவறுகூட வந்துவிடக்கூடாது என்பதால் வாக்குப்பதிவு தகவல்களை ஒன்றுக்கு இரண்டு முறை வாக்குச்சாவடிகள் வாரியாக சரிபார்க்க வேண்டியிருந்தது. அதனால்தான் துல்லியமான வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட சற்று காலதாமதமானது.
வாக்குப்பதிவு தொடர்பாக இறுதிசெய்யப்பட்ட தகவலின்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 73.67 சதவீதம் ஆகும். ஆண் வாக்காளர்களில் 73.49 சதவீதம் பேரும் பெண் வாக்காளர்களில் 73.85 சதவீதம் பேரும் மற்றவர்கள் (திருநங்கைகள்) 12.72 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
அதிகபட்ச அளவாக தருமபுரி தொகுதியில் 81.07 சதவீதமும், குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 60.4 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆண் வாக்காளர்களில் தருமபுரியில் அதிகபட்சமாக 81.58 சதவீதமும் பெண் வாக்காளர்களில் அதிகபட்சமாக சிதம்பரம் தொகுதியில் 81.91 சதவீதமும் வாக்களித்துள்ளனர். தபால் ஓட்டுக்காக சுமார் 2 லட்சம் விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. தபால் வாக்குகளையும் சேர்த்தால் வாக்குப்பதிவு சதவீதம் 0.5 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கக் கூடும்.
சென்னை மாவட்டத்தில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 61.83 சதவீதம் ஆகும். ஆண்கள் வாக்குப்பதிவு 63.59 சதவீதமாகவும், பெண்கள் வாக்குப்பதிவு 60.09 சதவீதமாகவும், மற்றவர்களின் (திருநங்கைகள்) வாக்குப்பதிவு 2.29 சதவீதமாகவும் இருந்தது.
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 64.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண்கள் 66.2 சதவீதம், பெண்கள் 62.73 சதவீதம் ஆகும். தேர்தல் நடத்தை விதிகள் மே 28-ம் தேதி வரை அமலில் இருக்கும். மறுவாக்குப்பதிவு இல்லாத சூழல் ஏற்படும் பட்சத்தில் நடத்தை விதிமுறைகளை சற்று தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.
நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
மக்களவைத் தேர்தல் முடிந்துவிட்டதால் தமிழகத்தில் அன்றாட நிர்வாகப் பணி மற்றும் வளர்ச்சிப் பணிகளை மாநில அரசு மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தடை விதித் துள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்டதால், மறுவாக்குப்பதிவு வாய்ப்புள்ள மாவட்டங்கள் தவிர, மற்ற இடங்களில் அன்றாட அரசு நிர்வாகப் பணிகளையும் வளர்ச்சிப் பணிகளை யும் மேற்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனினும், ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகள் முடியும்வரை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள எந்த அரசு அதிகாரிகளையும் இடமாற்றம் செய்யக்கூடாது. அதேபோல், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் அமைச்சர்களோ அல்லது அரசியல் கட்சியினரோ எந்தவிதமான ஆய்வுக்கூட்டமும் நடத்தக்கூடாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் பிரவீண் குமார் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT