Published : 07 Apr 2014 08:11 AM
Last Updated : 07 Apr 2014 08:11 AM
மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து 9 ஆண்டுகள் பதவி சுகம் அனுபவித்துவிட்டு, இப்போது மதச்சார்பின்மையை பாடம் சொல்லிக் கொடுக்கிறது திமுக என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசினார்.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ள கே.செல்வராஜை ஆதரித்து கோவை, பூ மார்க் கெட்டில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியை எந்த சக்தியாலும் முறியடிக்க முடியாது. வரும் காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் முதல் இயக்கமாக வளரும்.
வளர்ச்சி யாரால்?
காங்கிரஸ் கட்சி தன்மானத் தோடும் தனித் தன்மையோடும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாக்காளர்களை தைரியமாக சந்திக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளாக செய்த திட்டங்களின் அடிப்படையிலேயே இன்று தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது.
பாஜக மோடியை பிரதமர் வேட்பாளராக அறிமுகம் செய்துள்ளது. மோடி என்பது பெயரா? பொருளா? என்றுகூட தமிழக மக்களுக்கு 6 மாதத்துக்கு முன்பு வரை தெரியாது. அந்த கட்சியினரே அவரை எதிர்க்கும்போது, பதவி ஆசையில் குஜராத்தை விட்டுவிட்டு, வேறெங்கோ போட்டியிட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். மக்கள் தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்தால் 6 மாதத்தில் மீண்டும் ஒரு தேர்தல் நடைபெறும்.
சாராயக் கடைகள்
காமராஜர் பள்ளிகளை திறந்தார். ஆனால், திராவிடக் கட்சிகள் இரண்டும் கிராமங்கள் தோறும் சாராயக் கடைகளைத் திறக்கின்றன. 47 ஆண்டுகள் எந்த வளர்ச்சியையும் தராமல் அணைகள் கட்டுமிடங்களில் எல்லாம் மனைகளை கட்டிக் கொண்டவர்கள் திராவிடக் கட்சியினர். மின் வசதி, தொழில், கட்டுமான மூலப்பொருள்கள், பஞ்சாலை, விசைத்தறி தொழிற்கூடங்கள் அனைத்தும் இன்று பல பிரச்சினைகளை சந்திப்பதற்கு காரணம் தமிழக அரசுதான் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.
லாபத்துக்கு யோசனை
அதிமுக தேர்தலுக்குப் பிறகு, எந்த கட்சியில் சேர்ந்தால் லாபம் கிடைக்கும் என்று யோசிக்கிறது. திமுக 9 வருடம் நம்மிடம் பதவி சுகம் அனுபவித்துவிட்டு, நமக்கே மதச்சார்பின்மையை பாடம் சொல்லிக் கொடுக்கிறது. மூன்றாவது அணியான பாஜக அணி, பதவிக்காக ஒன்று சேர்ந்த சந்தர்ப்பவாத கூட்டணி.
நான்காவதாக ஆங்காங்கே தெரியும் கம்யூனிஸ்டுகள், ரஷ்யாவில் மழை பெய்தால், இந்தியாவில் குடைப் பிடிப்ப வர்கள். 2008-ல் மத்திய அரசின் 4-ம் ஆண்டிலிருந்து வெளியேறிய கம்யூனிஸ்டுகளுக்கு அன்று முதல் இறங்கு முகம்தான்.
மிக முக்கியமான இந்தத் தேர்தலில் நமக்கு தேவை தொடர் வளர்ச்சியும் நிலையான ஆட்சியுமே. ஆனால் 2004, 2009-ல் இந்தியாவில் மதவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமை காங்கிரஸுக்கே சேரும். தொடர் ந்து மூன்றாவது முறையும் இந்த முயற்சி தொடரும். அதற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT