Published : 13 Apr 2014 09:58 AM
Last Updated : 13 Apr 2014 09:58 AM
சுட்டெரிக்கும் கோடை வெயிலைவிடத் தகிக்கிறது தமிழக அரசியல் களம். வாக்குப்பதிவுக்கு இன்னும் பதினோரு தினங்கள் மட்டுமே உள்ளன. யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற பட்டிமன்றம் திரும்பிய பக்கமெல்லாம் நடந்தபடியிருக்க, அரசியல் கட்சிகள் ஓட்டுக்களைப் பெற வளையவளைய மக்களை வலம்வருகின்றனர். அரசியல் கட்சிகளின் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், பதிலடிகள், கேலிக்கூத்துகள் என பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. இத்தனை களேபரங்களும் மக்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காகத்தானே? நாடாளுமன்றத்துக்கு நடைபெறும் இந்தத் தேர்தலில் அதையொட்டி கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள்படி பிரச்சாரத்தை முன்னெடுத்துச்செல்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
வெறும் சம்பிரதாயம்தான்
தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில், வெற்றி பெற்றால் என்னென்ன செய்வோம் என்று கட்சிகள் உறுதிமொழி அளிப்பது வாடிக்கை. இதுவரையிலும் கட்சிகள் மேற்கொண்டுள்ள பிரச்சாரங்களைப் பார்த்தல், தேர்தல் அறிக்கை என்பதே வெறும் சம்பிரதாயம் என்றே சொல்ல வைக்கிறது. தேர்தல் அறிக்கையை மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்வதில் கட்சிகளுக்கே ஆர்வம் இல்லை என்பதுபோலத் தெரிகிறது. ஊறுகாய்போல சில இடங்களில் மட்டும் தேர்தல் அறிக்கைகளை குறிப்பிடும் கட்சிகள், மற்ற நேரங்களில் தாக்குதல் பாணி பிரச்சாரத்திலேயே ஈடுபடுகின்றன என்பது தெளிவு.
ஜெயலலிதாவின் பிரச்சாரம்
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே வேட்பாளர்களையும் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுவிட்டு, அதே வேகத்தில் பிரச்சாரத்துக்குக் கிளம்பிய முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைப் பெரிதாக எடுத்துச்சொல்வதில்லை. பிரச்சாரத்துக்குப் போகும் இடங்களிலெல்லாம் காங்கிரஸையும் தி.மு.க-வையும் அவர் வறுத்தெடுக்கிறார். குறிப்பாக, தி.மு.க-வின் மீது ஏவுகணைகள்போலக் குற்றச்சாட்டுகள் பாய்கின்றன. 2ஜி அலைக்கற்றை ஊழல், மின்வெட்டு போன்றவற்றுக்கெல்லாம் தி.மு.க-தான் காரணம், காவிரி, முல்லைப் பெரியாறு விஷயத்தில் துரோகம், இலங்கைத் தமிழர் விஷயத்தில் நாடகம் என்று பல கட்டங்களில் அவர் பேசிய, சொன்ன கருத்துக்களே இப்போதும் மக்களின் முன்னால் வைக்கப்படுகின்றன.
போட்டிப் பிரச்சாரம்
தி.மு.க-வைப் பொறுத்தவரை ஜெயலலிதா சொல்லும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் சொல்லியே தி.மு.க-வின் பிரச்சார பீரங்கிகளுக்கு நாக்கு வறண்டுபோகிறது. 2ஜி அலைக்கற்றை முறைகேடுபற்றி ஜெயலலிதாவுக்குப் பதில் தரும் வகையில் சொத்துக்குவிப்பு வழக்கு தி.மு.க. பிரச்சார மேடைகளில் முக்கிய இடம் பெறுகிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியின் சாதனைகள், மத்திய அரசில் அங்கம் வகித்தபோது செய்த சாதனைகள், ஜெயலலிதா ஆட்சியில் தி.மு.க. ஆட்சியின் திட்டங்களுக்கு மூடுவிழா என்ற வகையில் தி.மு.க-வின் பிரச்சாரம் அமைந்திருக்கிறது. சில இடங்களுக்கு ஏற்ப தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் மேற்கோள் காட்டிப் பேசுகிறார். தேர்தல் அறிக்கையை வழக்கமாகச் சுட்டிக்காட்டிப் பேசும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்த முறை இனம், மொழி சார்ந்த விஷயங்களுக்கே முன்னுரிமை கொடுத்து உருக்கத்தையும் குழைத்துப் பேசுகிறார்.
மோடியை மையமிட்டு…
பா.ஜ.க-வும் காங்கிரஸ் கட்சியும் அகில இந்திய அளவில் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்தாலும், அவற்றை மையப்படுத்தித் தமிழகத்தில் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. வழக்கமாகத் தனிநபர் விமர்சனம், பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், புகழ்மாலை சூட்டுவது என்ற பாணியையே இந்தக் கட்சிகள் அதிகம் கடைப்பிடிக்கின்றன. தே.மு.தி.க-வைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கை வெளியிடாததால், அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், தி.மு.க., அ.தி.மு.க-வை விமர்சனம் செய்வதில் பிரச்சார நேரத்தைச் செலவிடுகிறார். இடையில் மோடி புகழ், குஜராத் புகழ் பாடும் விஜயகாந்த், நதிநீர் இணைப்பு உள்ளிட்ட விஷயங்களைப் பேசி அவர் பாணியில் பிரச்சாரம் செய்கிறார். ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்தாலும், மோடியை மையப்படுத்தியும், இலங்கைத் தமிழர் நலனை மையப்படுத்தியுமே பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகிறது. இடதுசாரிக் கட்சிகள் வழக்கம்போல, தங்கள் கொள்கை சார்ந்த விஷயங்களைப் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்துகின்றன.
தமிழகத்தில் நடைபெறும் பிரச்சாரங்களைப் பார்த்தால், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் போலில்லாமல், உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத்துக்கான தேர்தல் பிரச்சாரங்கள் போலத்தான் தோன்றுகிறன. ஆக, தேர்தல் அறிக்கை ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்திருக்கிறது தமிழகத் தேர்தல் களம்.
தொடர்புக்கு: karthikeyan.di@kslmedia.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT