Published : 06 Apr 2014 10:21 AM
Last Updated : 06 Apr 2014 10:21 AM
பதவிக்காக சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் ராமதாஸூம் விஜயகாந்தும் இந்தத் தேர்தலோடு காணாமல் போய்விடுவர் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறினார். சென்னையில் உள்ள 3 தொகுதி களில் போட்டியிடும் அதிமுக வேட் பாளர்களை ஆதரித்து சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்ட சரத்குமார் பேசியதாவது:
இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, மத்தியில் 57 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. ஆனால், நாட்டுக்காக எதுவும் செய்யாமல் தங்களுக்காக ஊழல்களைத்தான் செய்தனர்.
திமுகவும் காங்கிரஸ் கூட்டணியில் 9 ஆண்டுகள் அங்கம் வகித்தது. அந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையில் இனப்படுகொலை நடந்தது. அதை தட்டிக் கேட்காத திமுக, தன் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொண்டதே தவிர, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 41 தொகுதியில் நின்று, 29 தொகுதிகளில் வெற்றி பெற்றார். பிறகு கூட்டணியிலிருந்து விலகி, அறிவாலயம், டெல்லிக்கு படையெடுத்துவிட்டு, இப்போது கமலாலயத்தில் இருக்கிறார்.
திராவிடக் கட்சிகள், தேசியக் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என சொன்ன பாமக நிறுவனர் ராமதாஸ், இப்போது திராவிடக் கட்சிகளோடு இணைந்து, தேசிய கட்சியிடம் கூட்டணி வைத்துள்ளார். சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் ராமதாஸூம் விஜயகாந்தும் இந்தத் தேர்தலோடு காணாமல் போய்விடுவர். மத்திய ஆட்சியில் அதிமுக அங்கம் வகிக்க வேண்டும். அதற்காக இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு சரத்குமார் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT