Published : 24 Apr 2014 09:59 PM
Last Updated : 24 Apr 2014 09:59 PM

மக்களவைத் தேர்தல்: என்ன சொன்னார்கள் தமிழகத் தலைவர்கள்?

மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தபின் செய்தியாளர்களிடம் பேசியதன் தொகுப்பு.

தமிழக முதல்வர் ஜெயலலிதா:

"நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடந்து முடியும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் முடிவு வரும் வரை வேறு எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை"

திமுக தலைவர் கருணாநிதி:

"இந்தத் தேர்தல் திமுக அணிக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளை நிச்சயம் பெறுவோம். அதிமுக பணத்தில் புரள்கிற கட்சி. அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எதுவும் எடுத்ததாக இதுவரைத் தெரியவில்லை."

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

"யாருக்கு வாக்களித்தீர்கள் என செய்தியாளர்கள் கேட்பது சரியல்ல. யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளியில் கூறக் கூடாது. எனினும் நல்லவர்களின் லட்சியம் வெல்வது நிச்சயம் என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன்."

மதிமுக பொதுச் செயலர் வைகோ:

"ஓட்டுக்குக் கொடுக்கும் 500 ரூபாய் என்பது 5 வருடத்துக்கு கணக்குப் பார்த்தால் 27 பைசாதான். இது பொதுமக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. அதை வைத்து ஒரு பொடி மட்டைகூட வாங்க முடியாது. பிச்சைக்காரர்களுக்குகூட ஒரு ரூபாய் கொடுத்தால் வாங்க மாட்டார்கள். இது மிகவும் கேவலமான செயல். 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்பது என்னுடைய கணிப்பு."

பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷணன்:

"தமிழக மக்களின் உற்சாகத்தை பார்க்கும் போது மாற்றம் தேவை என்பது தெரிகிறது. ஜனநாயக முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றும். கன்னியாகுமரி தொகுதியில் நான் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். கடந்த 5 நாட்களாக வாகன சோதனையே நடக்கவில்லை. இச்சம்பவங்களை பார்க்கும் போது தேர்தல் ஆணையம் தேவை தானா? என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது."

பாமக நிறுவனர் ராமதாஸ்:

"தேசிய ஜனநாயகக் கூட்டணி 20 முதல் 25 தொகுதிகளில் வெற்றிபெறும்."

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்:

"தமிழகத்தில் அதிமுக திமுக இல்லாத மாற்று அணி உருவாக வேண்டும் என்ற தமிழக மக்களின் ஆர்வம் இந்தத் தேர்தலில் தெரிகிறது. மோடி பிரதமராக வேண்டும், இந்தியாவின் பொருளாதாரம் உயர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். தே.ஜ. கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றி பெறும்.

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் முதல்முறையாக விதித்த 144 தடை உத்தரவு அதிமுக, திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதற்குதான் உதவியாக இருந்தது."

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்:

"நிலையான அரசு, இளமையான அரசை தரவேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. தமிழகத்தில் மட்டும் 14 இளைஞர்கள் போட்டியிட்டுள்ளனர். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்ற முழுநம்பிக்கை இருக்கிறது. தேர்தல் ஆணையம் 144 தடை உத்தரவு பிறப்பித்ததே எங்களுக்காகத்தான். ஆனால் அதிமுக தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. தமிழகத்திலே அதிமுகதான் வாக்காளர்களுக்கு அதிக அளவு பணத்தை வாரி வழங்கி இருக்கிறது."

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x