Published : 23 Apr 2014 09:16 AM
Last Updated : 23 Apr 2014 09:16 AM
வேட்புமனு தாக்கல் செய்ததோடு கடமையை முடித்துக்கொண்ட பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்கள், பிரச்சாரக் களத்தில் காணாமலே போய்விட்டனர். சென்னை யின் 3 தொகுதிகளில் போட்டியிடும் 69 சுயேச்சைகளில் 60-க்கும் மேற்பட்டோர் மருந்துக்குகூட பிரச்சாரம் செய்யவில்லை.
மக்களவை, சட்டமன்றத் தேர் தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர் கள் மட்டுமல்லாமல் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுவது வழக்கம். அரசியல் கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத சிலர், சுயேச்சையாகப் போட்டி யிட்டு வெற்றி பெற்றதும் உண்டு. தனிப்பட்ட செல்வாக்கில் வெல்லும் சுயேச்சை வேட்பாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
வீண் பெருமைக்காக தேர்தலில் போட்டியிட்ட நிலை மாறி, இப் போது பணத்துக்கு விலை போகும் சுயேச்சை வேட்பாளர்கள் எண் ணிக்கை அதிகரிப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர். முன்பெல்லாம் சுயேச்சை வேட்பாளர்களின் பிரச் சாரத்துக்கு ஆட்டோவே பிரதானம். அதில் ஒலிபெருக்கிகளை கட்டிக் கொண்டு, பெரிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இணையாக வீதிவீதியாக பிரச்சாரம் செய்வார் கள். இப்போது நிலைமை தலை கீழ். வேட்புமனு தாக்கல் செய்வ தோடு சரி. பின்னர் பிரச்சாரக் களத் தில் பார்க்கவே முடிவதில்லை.
இந்த மக்களவைத் தேர்தலிலும் அதே நிலைதான். சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் தென்சென்னை தொகுதியில்தான் அதிகபட்சமாக 42 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 30 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.
வடசென்னை தொகுதியில் போட்டியிடும் 40 வேட்பாளர்களில் 27 பேரும் மத்திய சென்னையில் போட்டியிடும் 20 வேட்பாளர்களில் 12 பேரும் சுயேச்சைகள். 3 தொகுதிகளிலும் மொத்தம் 69 சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளனர்.
இவர்களில் ஒருசிலர் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாக்கு சேகரிப்பதைக் காண முடிந்தது. சிலர் பெயரளவில் துண்டுப்பிரசுரம் அச்சிட்டு, தாம் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளில் மட்டும் போட்டுச் சென்றனர். மற்றபடி சுயேச்சை வேட்பாளர்களைப் பார்ப்பதே அரிதாக இருந்தது.
அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சிகள், வாக்குச்சாவடிக் குள்ளும் வாக்கு எண்ணும் மையத் திலும் தங்களது பிரதிநிதிகள் அதிகம் இருக்க வேண்டும் என் பதற்காக, தாங்களே பெயருக்கு சிலரை சுயேச்சைகளாக களமிறக்குவதுண்டு. சில சுயேச்சைகள், வேட்புமனு தாக்கல் செய்தபின், பிரபலமான கட்சி வேட்பாளரிடம் வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு, டெபாசிட்டை ‘தக்க’ வைத்துக் கொள்வதாகவும் பரவலாக மக்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT