Published : 07 Apr 2014 09:00 AM
Last Updated : 07 Apr 2014 09:00 AM

கிருஷ்ணகிரியில் ரூ.10.49 கோடி தங்கம், வைரம் பறிமுதல்

கிருஷ்ணகிரியில் உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 கோடியே 49 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம் மற்றும் வெள்ளி பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே பர்கூர் தேர்தல் பறக்கும்படை வட்டாட்சியர் ஜெயக்குமார் மற்றும் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த டெம்போ டிராவலர் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் கோவையிலிருந்து ஒசூருக்கு தங்கம், வைரம் மற்றும் வெள்ளி பொருட்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. விசாரணையில் ஒசூர் பகுதியில் உள்ள 12 நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக வாகனத்தில் வந்தவர்கள் தெரிவித்தனர். மேலும், உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் 37.36 கிலோ தங்கம், 4.6 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 22 கிராம் வைரம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.10 கோடியே 49 லட்சம்.

பறிமுதல் செய்த பொருட்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உடனடியாக வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உரிய விசாரணை செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்ரமணியன், நேர்முக உதவியாளர் (கணக்குகள்) முகமது பரூக் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x