Published : 06 Apr 2014 10:11 AM
Last Updated : 06 Apr 2014 10:11 AM

மக்களவைத் தேர்தல்: தமிழகம், புதுச்சேரி கடலோர பாதுகாப்புப் படைகள் கூட்டு ரோந்து

மக்களவைத் தேர்தலுக்காக தமிழகம், புதுச்சேரி கடலோர பாதுகாப்புப் படை சார்பில் கூட்டு ரோந்து மேற்கொள்ளப்படும் என புதுச்சேரி டிஜிபி ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி கடலோர பாதுகாப்புப் படைகள் கூட்டு ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக கூடுதல் டிஜிபி சி.சைலேந்திரபாபு, டிஎஸ்பி பாலசுப்பிரமணியம், ஆய்வாளர் சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி தரப்பில் டிஜிபி காம ராஜ், சீனியர் எஸ்.பி. ஓம்வீர் சிங் பிஷ்னாய், எஸ்.பி. நந்தகோபால், இன்ஸ்பெக்டர் மாறன் மற்றும் அதி காரிகள் கலந்துகொண்டனர். ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக டிஜிபி காமராஜ் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தின் மத்திய, வடக்கு மண்டல ஐ.ஜி.க்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினோம். மாநில எல்லை களில் சோதனைச் சாவடிகள் வைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புதுவையில் 24 சிறப்பு பறக்கும் படைகளும், காரைக்காலில் 5 பறக்கும் படைகளும் இதில் ஈடுபட்டுள்ளன.

கடலோர கூட்டு ரோந்து

தமிழகம், புதுச்சேரி கடற்கரை பகுதியில் பண நடமாட்டம், மது பானம் கடத்தல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் இரு கடலோர காவல்படைகள் சார்பில் கூட்டு ரோந்து நடத்தப்படும். இந்திய கடலோர காவல் படையுடன் சேர்ந்து பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்வோம். மேலும் கடலோர காவல் படையில் கூடுதல் காவலர்களை நியமிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் பணிக்காக ஏற்கெனவே 4 கம்பெனி மத்திய ஆயுதப் போலீஸ் படைகள் வந்துள்ளன. மேலும் சில கம்பெனி படையினர் அனுப்பப்படுவர் என எதிர்பார்க்கிறோம். ஏனாம், மாஹே பிராந்தியங் களிலும் தேர்தல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு கோதாவரி மாவட்ட எஸ்.பி. கேரள மாநில காவல் துறையுடன் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளோம். பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்றார் காமராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x