Published : 30 Apr 2014 12:00 AM
Last Updated : 30 Apr 2014 12:00 AM
கேப்டன் அமரீந்தர் சிங், பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் பதவி வகித்தவர், ‘பாடியாலா மகாராஜா’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், அனைத்திந்திய ஜாட் மகாசபைத் தலைவர், அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அருண் ஜேட்லியை எதிர்த்துக் களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அருண் ஜேட்லி மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது நிச்சயம். பா.ஜ.க. - அகாலிதளக் கூட்டணி அரசுக்கு எதிரான ஊழல் புகார்களாலும், அரசின் நிர்வாகக் கோளாறுகளினாலும் மக்களுடைய அதிருப்தி வலுவாக இருக்கிறது. இந்தச் சூழலில், அமரீந்தர் சிங்கின் மனம் திறந்த பேட்டி:
காங்கிரஸ் கட்சி இந்த முறை பெரிய பிரமுகர்களையெல்லாம் களத்தில் நிறுத்தியிருக்கிறது. அம்பிகா சோனி, சுநீல் ஜாக்கர், பிரதாப் சிங் பஜ்வா மற்றும் நீங்கள் களத்தில் இறங்கியிருக்கிறீர்கள். மோடியின் பிரச்சாரத்தை இந்த உத்தி முறியடிக்குமா?
பஞ்சாபில் நரேந்திர மோடியே இல்லை; தேசியப் பிரச்சினைகளும் இங்கு விலைபோகாது. அகாலிதளம் - பா.ஜ.க. கூட்டணி அரசுக்கு எதிரான அலைதான் இங்கு வலுவாக வீசிக்கொண்டிருக்கிறது. பஞ்சாபில் எங்களை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே செல்வாக்கற்றவர்கள். 47 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ளவன் என்ற வகையில், திறமையான அரசைத் தந்தவன் என்ற முறையில், இந்தத் தேர்தலில் போட்டியிடுமாறு சோனியா காந்தி கேட்டுக்கொண்டதால் களத்தில் நிற்கிறேன்;
மோடியைச் சமாளிப்பதற்காக நாங்கள் களத்துக்கு வரவில்லை. தேசிய விவகாரம் தொடர்பாக என்னுடன் விவாதிக்கத் தயாரா என்று ஜேட்லி எனக்குச் சவால் விடுத்தார். அமிர்தசரஸ், பஞ்சாப் பிரச்சினைகளையும் அதில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றேன். ஜேட்லி விவாதத்தைச் சந்திக்க அஞ்சி ஓடிவிட்டார். பஞ்சாபைப் பற்றி அவருக்கு அதிகம் தெரியாது என்பதால் அவர் விவாதத்துக்கு வரவில்லை.
2012 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முகமாக நீங்கள்தான் இருந்தீர்கள்; கட்சி அந்தத் தேர்தலில் தோற்றுவிட்டது. இந்த முறை காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு எப்படி?
நான் நிச்சயம் வெல்வேன். நான் பஞ்சாப் முதலமைச்சராக ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்திருக்கிறேன், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறேன், பிரச்சாரக் குழு பொறுப்பாளராக இருமுறை நியமிக்கப்பட்டிருக்கிறேன். ஜேட்லியை இங்கு யாருக்கும் தெரியாது.
அருண் ஜேட்லி வெளியாள் என்றும் ஆணவம் பிடித்தவர் என்றும் குற்றஞ்சாட்டுகிறீர்கள்; நீங்களுமே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், சாதாரணமானவர்கள் உங்களைப் பார்க்கவே முடிந்ததில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. நீங்கள் முதல்வராக இருந்தபோது, அமைச்சர்களைக்கூடப் பார்க்க மாட்டீர்கள் என்று கூறப்படுகிறது, இது உண்மையா?
நான் ஆணவம் பிடித்தவன் என்றால், ஜேட்லி ஆணவச் சக்ரவர்த்தி. அவர் தன்னைப் பற்றிய கர்வத்தில் ஆழ்ந்திருப்பவர், தான் என்ற அகம்பாவம் பிடித்தவர், சுயநலவாதி.
போதைப்பொருள் விவகாரத்தில் பாதல் அரசை நீங்கள் குறைகூறுகிறீர்கள்; எல்லைக்கு அப்பாலிருந்து இந்தியாவுக்குள் வந்த போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
போதை மருந்துக் கடத்தல் பெருக மூன்று விதமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்திய எல்லையில் நடைபெறும் சர்வதேசக் கும்பலின் கடத்தல். அடுத்தது, பஞ்சாபிலேயே ரகசியமாகச் சாகுபடியாகும் போதை மருந்துச் செடிகளிலிருந்து எடுத்துக் கடத்தி வரப்படுவது. மூன்றாவது, போதை மருந்துக் கடத்தலைத் தடுக்க வலுவான தேசியக் கொள்கைகள் ஏதுமில்லாதது.
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் கடத்தப்படும் போதை மருந்துகளை, ஹெராயினை எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) கைப்பற்றுகிறது. மாநிலத்துக்குள்ளேயே கடத்தி விற்கப்படும் போதைப் பொருள்களால்தான் பிரச்சினையே. பஞ்சாபில் போதை மருந்துக் கும்பலின் தலைவர் ஜகதீஷ் சிங் போலாவைக் கைதுசெய்த பிறகு, அவர் தந்த கையெழுத்திட்ட ஒப்புதல் வாக்குமூலத்திலேயே, மாநில அமைச்சர்களுக்கு இதில் தொடர்பிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
பஞ்சாபின் வருவாய்த் துறை அமைச்சர் விக்ரம் சிங் மஜீதியா (துணை முதல்வர் சுக்வீர் சிங் பாதலின் மைத்துனர்), பஞ்சாப் சிறைத் துறை அமைச்சர் சர்வான் சிங் பில்லௌரின் மகன் தமன்ஜீத் சிங் பில்லௌர் ஆகியோருக்கு முக்கியப் பங்கு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
நீங்கள் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் போதை மருந்துக் கடத்தலை எப்படிக் கையாண்டீர்கள்?
டெல்லியில் நடந்த ஐந்து முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசி, இதுகுறித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறேன். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுகூட இதைப் பற்றிப் பேசியிருக்கிறேன். போதை மருந்துகளை விற்றதாகப் பல சிறு வியாபாரிகள் என் ஆட்சியில் பிடிக்கப்பட்டனர். சட்டம் வலுவாக இல்லாததால், அவர்கள் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்துவிட்டனர். சட்டத்தைத் திருத்த வேண்டும்.
பொற்கோவிலில் ராணுவம் நுழைந்த சம்பவத்தைக் கண்டித்து 1984-ல் காங்கிரஸ் கட்சியை விட்டே வெளியேறினீர்கள்; சமீபத்தில், ஜகதீஷ் டைட்லருக்கு சீக்கியர் படுகொலையில் தொடர்பே இல்லை என்று நற்சான்று வழங்கினீர்கள். இது அரசியல் தற்கொலையில்லையா?
நான் யாருக்கும் நற்சான்றிதழ் தரவில்லை. இது ஜேட்லியின் விஷமப் பிரச்சாரம். இப்போது சி.பி.ஐ. இதை விசாரித்துவருகிறது, நீதிமன்றங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும். நான் யாருக்கும் சான்று தர வேண்டிய அவசியமில்லை. நானும் என்னுடைய சகோதரர்களும் பாதிக்கப்பட்ட சீக்கியர்களைச் சந்தித்து அவர்களைத் தாக்கியவர்களின் பெயர்களைக் கேட்டபோது 47 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் பெயர்களையும் ஐந்து காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களையும் கூறினர். அந்தப் பெயர்களில் டைட்லர் இல்லை. 1999-ல் டெல்லியில் டைட்லர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டார் என்பதால், அவருடைய பெயரை மதன்லால் குரானாதான் சேர்த்தார்.
© பிசினஸ் லைன், தமிழில்: சாரி,
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT