Published : 24 Apr 2014 08:28 AM
Last Updated : 24 Apr 2014 08:28 AM
தமிழகத்தில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள சிறை கைதிகள் வாக்களிக்க சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
சிறையில் உள்ள தண்டனை கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியாது. குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளவர் கள் வாக்களிக்கலாம். தமிழகத்தில் 9 மத்திய சிறை, 9 மாவட்ட சிறை, 95 கிளை சிறை, 3 பெண்கள் சிறப்பு சிறை, 2 ஆண்கள் சிறப்பு சிறை, 3 திறந்தவெளி சிறைகளும் உள்ளன. இந்த சிறைகளில் கடந்த 7-ம் தேதி புள்ளிவிவர கணக்குப்படி, ஆண்கள் 13,334 பேரும், பெண்கள் 615 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் 43 பெண்கள் உள்பட 1,851 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மத்திய சிறையில் 60 பேர் குண்டர் தடுப்பு காவல் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். சேலம் சிறையில் உள்ள குண்டர் தடுப்பு காவல் கைதிகள் 40 பேர், தேர்தலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளனர். இவர்களில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை 10 பேர் வாக்காளர் அடையாள அட்டை கொடுத்துள்ளதால், அவர்கள் 10 பேர் மட்டும் இன்று வாக்களிக்க உள்ளனர்.
மாநிலம் முழுவதும் குண்டர் தடுப்பு காவல் சிறையில் அடைக் கப்பட்டுள்ள 1,851 பேரில் வாக்க ளிக்க விருப்பம் உள்ளவர்கள், வாக்காளர் அடையாள அட்டையை சிறைத்துறை கோரியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை அளிப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
தண்டனை பெற்ற கைதிகளுக்கு வாக்களிக்க உரிமை இல்லை. ஆனால், விசாரணை கைதிகள் வாக்களிக்க முடியும். விசாரணை கைதிகள் திடீரென ஜாமீனில் செல்லலாம். திடீரென கைதாகி சிறைக்கு வருபவர்களும் உள்ளனர். இதனால், அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தேர்தல் நாளன்று யார் யார் சிறையில் இருப்பார்கள், எத்தனை பேர் வெளியே செல்வார்கள் போன்று திட்டமிட முடியாத நிலை உள்ளதால், அவர்கள் வாக்களிக்க சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT