Published : 22 Apr 2014 10:00 AM
Last Updated : 22 Apr 2014 10:00 AM
தேர்தல் காலங்களில் எல்லாம், பல்வேறு இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புகளை காண முடிகிறது. தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலிலும் பல்வேறு கிராமங்களில், சிறிய பிரச்சினைகளைக் காரணம் காட்டி, தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. இவ்வாறு தேர்தல் புறக்கணிப்பு செய்வது மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வாகாது.
விழிப்புணர்வு
தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை செலுத்த வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மனிதச் சங்கிலி, பேரணி, ஊர் ஊராக பிரச்சாரம், போட்டிகள், ஸ்கேட்டிங், இருசக்கர வாகனப் பேரணி என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கல்வி நிறுவனங்கள், அரசுத்துறைகளின் ஒத்துழைப்புடன் நடத்தி இருக்கிறது.
தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க பிடிக்கவில்லை என்றால் கூட அதற்காக `நோட்டா’ என்ற பட்டனை, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தி உள்ளது. அதை அழுத்தி தங்கள் எதிர்ப்பை மக்கள் தெரிவிக்கவும் தேர்தல் ஆணையம் வழிவகை செய்திருக்கிறது.
புறக்கணிப்பு அறிவிப்பு
மிகப்பெரிய ஜனயநாக நாட்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவிட்டு தேர்தலை நடத்தும்போது, சிறு பிரச்னைகளை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணிக்கும் அறிவிப்புகள் வெளியாவது, அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தர்மசங்கடத்தை உருவாக்குகிறது.
தேர்தலைக் காரணம் காட்டியாவது தங்கள் பகுதியில் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டுவிடாதா என்ற எதிர்பார்ப்பில் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புகளை சிலர் வெளியிடுகிறார்கள். கடந்த சில நாள்களுக்கு முன் திருநெல்வேலி அருகே மானூர் பகுதியில், தண்ணீர் பிரச்சினையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக சிலர் திரண்டனர். நாங்குநேரி பகுதியிலும் தேர்தல் புறக்கணிப்பு குறித்த அறிவிப்பு தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
கொட்டாகுளம்
தேர்தல் வாக்குப்பதிவுக்கு 2 நாள்களே எஞ்சியிருக்கும் நிலையில் வாக்குச்சாவடியை தூரமான இடத்தில் மாற்றி விட்டதாக, தென்காசி தொகுதிக்கு உள்பட்ட செங்கோட்டை தாலுகா, சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி கொட்டாகுளம் கிராமத்திலுள்ளவர்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை செய்திருக்கிறார்கள்.
இக்கிராமத்தில் மொத்தம் 3,200 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்களுக்கு 47, 48, 49, 50 என்று 4 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வாக்காளர்கள் பல காலமாக கொட்டாகுளம் ஆர்.சி. தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியில்தான் வாக்களித்து வந்தனர். தற்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு 48-வது வாக்குச் சாவடியை மட்டும் 3 கி.மீ. தூரமுள்ள வல்லம் அன்னை தெரசா ஆர்.சி. பள்ளிக்கு மாற்றியிருக்கிறார்கள். இதைக் கண்டித்து மொத்த வாக்காளர்களும் தேர்தல் புறக்கணிப்பு செய்ய உள்ளதாக, இந்த கிராம மக்கள் சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கு திங்கள்கிழமை மனு அனுப்பப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கைவிரிப்பு
இவ்வாறு தேர்தல் நேரத்தில் வாக்குப்பதிவை புறக்கணிப்பது என்ற அறிவிப்பு வந்தததும் அதிகாரிகள் அந்தந்த பகுதி மக்களை சமாதானம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கிவிட்டதால் இந்த விவகாரத்தில் உடனடியாக எதையும் செய்ய இயலாது என்று அதிகாரிகள் தரப்பில் மக்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்தலை புறக்கணிப்பதை விட, தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத கட்சிக்கு எதிராக வாக்களிக்கலாம். எந்த கட்சிக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனில், நோட்டாவுக்கு வாக்களித்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம். இதுதான், அரசியல் கட்சிகளுக்கு மக்கள் தரும் சாட்டையடியாக இருக்கும்.
சமூக விரோதிகளே காரணம்: ஆட்சியர்
மாவட்டத்தில் தேர்தல் புறக்கணிப்புக்கு சில சமூக விரோதிகள் தூண்டுதலாக இருப்பதாக, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.கருணாகரன் தெரிவித்திருக்கிறார்.
திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் சில சமூக விரோதிகள் தங்களின் ஆதாயத்துக்காக, தேர்தல் புறக்கணிப்பு என்ற பெயரில் கிராம மக்களை தூண்டி விடுவதாக தெரியவருகிறது. பொதுமக்களின் வாக்குரிமையை தடுப்பவர்கள் மீது, காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களது கிராமத்துக்கு தேவையான கோரிக்கைகள் ஏதுமிருந்தால், தேர்தல் முடிந்தபின் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அணுகி, அவற்றை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
திருச்சிற்றம்பலம் கால்வாயின் வெள்ளநீர் வெளிப்போக்கி சம்பந்தமாக, ஆட்சியர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், செயற்பொறியாளர் (சிற்றாறு வடிநிலக்கோட்டம்), இணை இயக்குநர் (வேளாண்மை), விவசாயிகளின் பிரதிநிதிகள் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழு நேரடி தல ஆய்வு மேற்கொண்டு, தேர்தலுக்குப்பின் நியாயமான தீர்வு காணப்படும், என்று ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT