Published : 23 Apr 2014 12:00 AM
Last Updated : 23 Apr 2014 12:00 AM

அதிமுக, திமுக கடும் போட்டியில் கரூர் தொகுதி

தொகுதிக்கென்று பெரிதாக எதுவும் செய்யாதது, தொகுதியில் இல்லாதது போன்ற காரணங்களால் அதிமுக வெற்றி பெறுவது கடினம் என்ற நிலை இருந்தது. அதிமுக வேட்பாளரும், அமைச்சரும் செல்லுமிடங்களில் மக்களிடையே எதிர்ப்பு காணப்பட்டது. கருப்புக்கொடி காட்டுதல், தேர்தல் புறக்கணிப்பு, குடிநீர் பிரச்சினை, விலையில்லா பொருட்கள் வழங்கப்படாதது என தொடக்கத்தில் மக்களிடம் எதிர்ப்பைச் சந்தித்து வந்தார் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை.

ஊடக கருத்துக்கணிப்புகளில் திமுக வெற்றி பெறும் நிச்சய தொகுதிகளில் ஒன்றாக கரூர் இடம்பெற்று வந்த நிலையில், அதன்பின் சுறுசுறுப்பான மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பிரச்சாரத்திற்கு போகும் இடங்களில் முதல் நாளே சரிக்கட்டி எதிர்ப்புகளை அடக்கினார். நடிகர், நடிகைகளை தொகுதியில் பிரச்சாரத்தில் இறக்கினார்.

ஊடக கருத்துக்கணிப்புகளால் சற்றே மெத்தனமான திமுக, வேட்பு மனுத்தாக்கலின்போது, ஆளுங்கட்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்தங்கியது. அதிமுக வேட்பாளரின் எதிர்ப்பு அலையிலே கரைசேர்ந்து விடலாம் என்ற நினைப்பு திமுகவினரின் தப்பான கணக்காகிப் போனது. முதல்முறையாக பாஜகவை விமரிசித்துப் பேசிய முதல்வர் வருகைக்குப் பின் அதிமுகவினரிடையே எழுச்சி ஏற்பட்டது.

நடிகை குஷ்பூ, குமரிமுத்து, வாகை சந்திரசேகர், அன்பழகன் ஆகியோர் திமுக வேட்பாளர் சின்னசாமிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். முதல்வர் வந்து சென்ற நிலையிலும் ஸ்டாலினை மட்டுமே பிரச்சாரத்திற்கு அழைத்து வரமுடிந்தது. இதனால் திமுகவினர் பிரச்சாரத்தில் பின்தங்கினர்.

பிரச்சாரத்தில் அதிமுக முன்னிலை பெற்றாலும், திமுகவுக்கே வெற்றிவாய்ப்பு உள்ளதாக அக்கட்சியினர் நம்பினாலும் வெற்றி, தோல்வி என்பதில் சரிசம நிலையிலே அதிமுக, திமுக வேட்பாளர்கள் உள்ளனர் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

தேமுதிக வேட்பாளர் என்.எஸ்.கிருஷ்ணனை ஆதரித்து விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். கூட்டணி கட்சியினர் யாரும் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்பது கிருஷ்ணனுக்கு மைனஸ். எனினும் கூட்டணி கட்சிகளின் பலத்தால் மூன்றாமிடத்தை தக்கவைக்கவும், லட்சம் வாக்குகளை விட அதிகம் பெறவும் வாய்ப்புள்ளது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய பொறுப்பில் உள்ள ஜோதிமணி அறிவிக்கப்பட்டதும் கட்சியினரிடையே எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மாநில தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் பிரச்சாரத்தாலும், கம்யூனிஸ்ட்டுகள் கரூரில் போட்டியிடாததாலும் இவருக்கு நான்காம் இடம் உறுதியாகியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஐந்தாம் இடத்தைப் பிடிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x