Last Updated : 14 Apr, 2014 10:23 AM

 

Published : 14 Apr 2014 10:23 AM
Last Updated : 14 Apr 2014 10:23 AM

ஓட்டுக்கான அத்தாட்சி சான்று வழங்கும் கருவியில் பழுது: தொழில்நுட்ப நிபுணர் கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்

ஓட்டுக்கான அத்தாட்சி சான்று வழங்கும் கருவியில் அதிக அளவில் பழுது ஏற்படுவதால் தொழில்நுட்ப நிபுணர்களை அழைத்து ஆலோசனை நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

தேர்தலில் ஓட்டு போட்டதும் யாருக்கு ஓட்டு விழுந்தது என்பதை காட்டும் வகையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களில் ஓட்டு போட்டதும் சிறிய திரையில் சின்னம் மற்றும் கட்சியின் பெயர் 10 வினாடிகள் வந்து மறையும். ஏடிஎம்-களில் வருவதைப் போல் அத்தாட்சி சான்றும் வரும்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த நடைமுறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தி வருகிறது. முதல் முறையாக மேகாலயம் மற்றும் நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது. தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் சோதனை அடிப்படையில் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

தமிழகத்தில், மத்திய சென்னை தொகுதியில் சோதனை முறையில் பயன்படுத்தப்பட உள்ளது. இத்தொகுதியில் உள்ள 1,153 ஓட்டுச் சாவடிகளிலும் இக் கருவி பயன்படுத்தப்பட உள்ளது.

கடந்த ஒன்பதாம் தேதி தேர்தல் நடந்த மேகாலயம், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களில் 385 ஓட்டுச் சாவடிகளில் இக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இதில், பல இடங்களில் கருவிகள் வேலை செய்யாததால் ஓட்டுப்பதிவில் குழப்பம் ஏற்பட்டது. இதுவரை நடந்துள்ள சோதனை முயற்சியில் 12 சதவீத இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த அளவு மிக அதிகம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.

எனவே இயந்திரங்களை தயாரித்து அளித்துள்ள பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு கோளாறு ஏற்பட்ட கருவிகள் திருப்பி அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. இதுபோன்ற கோளாறுகள் ஏற்படாத வண்ணம் கருவிகளை வடிவமைக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதற்காக தொழில்நுட்ப நிபுணர்கள் கூட்டத்தை நடத்தவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

20 ஆயிரம் இயந்திரங்கள்

தற்போது தேர்தல் ஆணை யத்திடம் அத்தாட்சி சான்று வழங்கும் வகையில் 600 இயந்திரங்கள் உள்ளன. மேலும் 20 ஆயிரம் இயந்திரங்களை தயாரித்து அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இவை வந்ததும் அதிக அளவில் இந்த இயந்திரங்களை சோதனை முறையில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x