Published : 26 Apr 2014 09:26 AM
Last Updated : 26 Apr 2014 09:26 AM
தஞ்சை மறியல் பகுதி வாக்குச் சாவடியில் பெட்டியில் வைக்கப் பட்டு சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மண்டல தேர்தல் அலுவலர் திறந்து பார்த்ததால் வியாழக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தலையொட்டி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை யில் உள்ள மறியல் பகுதிக்கான வாக்குப்பதிவு அங்குள்ள ஊராட் சிப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இங்கு 5 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 236-வது வாக்குச்சாவடியில் 1,141 வாக்குகளில், மாலை 6 மணி முடிய 636 வாக்குகள் பதிவாகி இருந்தன. பின்னர், வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட பெட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இரவு 9 மணி யளவில் அங்கு வந்த மண்டல தேர்தல் அலுவலர் மணிகண்டன், அந்தப் பெட்டியின் சீலை உடைத்து, அதிலிருந்த மின்னணு இயந் திரத்தை இயக்கிப் பார்த்துள்ளார்.
அப்போது, வெளியில் நின்ற திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவின் வாக்குச்சாவடி முகவர்கள், உள்ளே வந்து சீலை உடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுபற்றி அறிந்து அங்கு வந்த டி.ஆர். பாலு, வாக்குச்சாவடி முகவர்களுக்குத் தெரியாமல் எதற்காக சீலை உடைத்தீர்கள் என்று கேட்டபோது, மணிகண்டன் பதில் கூறாமல் நின்றுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் செல்போன் மூலம் புகார் தெரிவித்த டி.ஆர்.பாலு, இந்த வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்போது, அங்கு வந்த வல்லம் டிஎஸ்பி சுகுமாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரை வெளியே செல்லுமாறு கூறினார். அப்போது, இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.
பின்னர், அங்கிருந்த இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான குந்தவை நாச்சியார் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டப்பட்டன.
இதையடுத்து, டி.ஆர். பாலு, மாவட்ட ஆட்சியருக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் அளித்த புகாரில், அந்த வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த வேண்டும். மண்டலத் தேர்தல் நடத்தும் அலுவலர் மீதும், தன்னை வெளியேறச் சொன்ன டிஎஸ்பி சுகுமாறன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் கூறும்போது, “இது வழக்கமான நடைமுறைதான். வாக்குச்சாவடி அலுவலர் அளித்த எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதை அறிவதற்காக மொத்த வாக்குகள் எண்ணிக்கை பட்டனை மட்டும் இயக்கிப் பார்க்க அனுமதி உள்ளது. சின்னங்கள் வாரியாக அறிவதற்கான பகுதியில் உள்ள சீலை உடைத்துப் பார்த்தால்தான் தவறு. ஆனால், இதை வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் செய்திருக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT