Published : 08 Apr 2014 03:17 PM
Last Updated : 08 Apr 2014 03:17 PM
பிஹாரில் காங்கிரஸுடனான கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு ஆதரவாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸும் ஆர்ஜேடியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்நிலையில், பிஹாரில் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கடந்த வாரம் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதற்கு லாலு வுக்கு அழைப்பு விடுக்கவில்லை. மேலும், பிஹாரில் இடைத் தேர்தல் நடைபெறும் 5 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என லாலு அறிவித்துள்ளார்.
இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான், சாசாராம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மீரா குமாருக்கு ஆதரவாக லாலு ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார்.
மதச்சார்பற்ற இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டால்தான் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியும் என பிரச்சாரத்தின்போது லாலு வலியுறுத்தினார். கடந்த தேர்தலின்போது ரத யாத்திரை மேற் கொண்ட அத்வானியை தடுத்து நிறுத்தியது போல, இந்த முறை மோடி பிரதமராவதையும் தடுத்து நிறுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார். மீரா குமாரை எதிர்த்து களம் இறங்கிய அவரது உறவினர் மேதவி கிரியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், ஐக்கிய ஜனதாதள வேட்பாளர் கே.பி. ராமய்யாவுக்கு ஆதரவாக மேதவி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT