Published : 16 May 2014 05:34 PM
Last Updated : 16 May 2014 05:34 PM
தோல்விகளும் படிப்பினைகளும் போராட்ட வாழ்வின் அங்கம் என்றும் எந்தக் கட்டத்திலும், தோல்வியால் மனம் கலங்கியது இல்லை எனவும் மதிமுக பொதுச்செயலர் வைகோ தேர்தல் தோல்வி குறித்து தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், தொடர் தோல்விகளால் மனரீதியாகப் பலவீனம் அடைந்துள்ளீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ: ''போராட்ட வாழ்வின் அங்கமே தோல்விகளும் படிப்பினைகளும்தான். இடையறாது தோல்விகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து வெற்றிகளைப் பெற்ற மாவீரர்கள், மாமனிதர்களின் வரலாறுகள்தாம் என்னை இயக்கிக்கொண்டே இருக்கின்றன.
எந்தக் கட்டத்திலும், தோல்வியால் மனம் கலங்கியது இல்லை. மாறாக, தோல்விச் செய்தி கிடைத்தவுடன், அந்தக் கணத்திலேயே எழுந்து வேகமாகப் பணி ஆற்றத் தொடங்கிவிடுவேன்" என்றார்.
மேலும், 96 சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க. ஓர் இடத்தில்கூட வெற்றி பெறாததை சுட்டிக் காட்டியதோடு முழுமையாகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, நிர்வாகக் குழுக் கூட்டத்தை நடத்த அரங்கத்தை ஏற்பாடு செய்ததையும் சுட்டிக்காட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT