Published : 06 May 2014 09:36 PM
Last Updated : 06 May 2014 09:36 PM
உத்தரப் பிரதேச மக்களின் வளர்ச்சியைப் பற்றி பேசும் நரேந்திர மோடி, அம்மக்களை நசுக்குவோருடன் கைகோத்துக் கொண்டிருப்பது, அவர் போடும் இரட்டை வேடத்தையே காட்டுகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.
உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மற்றும் மிர்ஸாபூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது:
உத்தரப் பிரதேசம், பிஹார் மாநில மக்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்தும், அவர்களது வளர்ச்சி பற்றியும் நரேந்திர மோடி பேசி வருகிறார். ஆனால் இந்த இரு மாநிங்களின் மக்களை அச்சுறுத்தி விரட்டியடிக்கும் சிவசேனை மற்றும் மகராஷ்டிர நவநிர்மாண் சேனையுடன் மோடி கூட்டணி அமைத்துள்ளார். இங்கு ஒரு முகம், அங்கு ஒரு முகம் என அவர் போடுவது இரட்டை வேடம்.
மும்பையில் வட இந்தியர்கள் மீதான தாக்குதல் நடவடிக்கைகள், பாஜகவின் இரட்டை நிலையைக் காட்டுகின்றன.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் மிகுதியாகக் கிடைக்கின்றன. கர்நாடகம், அசாம், ஹரியாணா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் வேறு மாநில இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஆனால், சிவசேனை, மகாராஷ்டிர நவநிர்மாண் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளோ மக்களை விரட்டியடிக்கின்றன. இப்போது அவர்கள் இங்கு (உ.பி) வந்து வளர்ச்சி பற்றி பேசுகிறார்கள்.
ஆறு மாதங்களுக்கு முன்பு கூட, தேர்தல்களுக்கு முன்பு அவர்கள் கலவரத்தைத் தூண்டினர். மக்களிடையை சண்டையை மூட்டுவதுதான் அவர்களுடைய ஒரே நோக்கமே தவிர வேலைவாய்ப்பு, வேளாண் உற்பத்தி உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி அவர்கள் பேசமாட்டார்கள்.
குஜராத்தில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வரும் சீக்கியர்களை மோடி அரசு விரட்டி அடிக்கிறது. குஜராத்தில் ரூ.26,000 கோடி மதிப்பிலான மின்சாரமும், ரூ.45,000 கோடி மதிப்பிலான விவசாய நிலமும் தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. ஆனால், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.30,000 கோடியை காங்கிரஸ் வழங்கியிருக்கிறது.
மத்தியில் மூன்றாவது முறையாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதாரம், மருத்துவ வசதி அளிக்கப்படும்" என்றார் ராகுல் காந்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT