Published : 15 May 2014 08:48 PM
Last Updated : 15 May 2014 08:48 PM
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, பலத்த பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி, முன்னணி மற்றும் வெற்றி நிலவரங்கள் வெளியாகின்றன.
இது குறித்து தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா கூறும்போது, "வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. முழுமையாகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எந்தவித பிரச்சினையும் இல்லை.
வெள்ளிக்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், 543 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் குறித்த விவரங்கள் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்படும்" என்றார் அவர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தேர்தல் முடிவுகளுக்கென உருவாக்கப்பட்ட பக்கம் >http://eciresults.nic.in/
காலை 8 மணி முதல் முன்னணி மற்றும் வெற்றி நிலவரங்கள் அப்டேட் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு, கடந்த ஏப்ரல் 7-ல் தொடங்கி இம்மாதம் 12 வரை 9 கட்டங்களாக நடைபெற்றது. இதில், சுமார் 55 கோடி மக்கள் வாக்களித்தனர். அதாவது, 66 சதவீத அளவில் வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 668 பெண்கள், 5 திருநங்கைகள் உள்பட 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள 989 மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை ராணுவப் படையினரும், மாநில போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கும் எண்ணும் பணியில் மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த 10 லட்சம் பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். மதியத்திற்குள் அடுத்த ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார் என்பது தெரிந்துவிடும். இறுதி முடிவு, மாலை 4 முதல் 5 மணிக்குள் தெரிந்துவிடும்.
கருத்துக் கணிப்புகள்
மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன், பல்வெறு ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து தொலைக்காட்சி செய்தி சேனல்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. அதில், பாஜக கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸுக்கு கடும் வீழ்ச்சி ஏற்படும் என கருத்துக் கணிப்புகள் கூறின.
'தி இந்து' ஆன்லைனில் 2014 தேர்தல் முடிவுகள்
மக்களவைத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவதுடன், அதையொட்டிய சூடான செய்திகளையும் 'தி இந்து' வலைத்தளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
ஒவ்வொரு சுற்று முடிவுகளையும், விஐபி தொகுதி நிலவரங்களையும் அறிந்துகொள்ள இணைந்திருக்க வேண்டிய சமூக வலைத்தளப் பக்கங்கள்: >https://www.facebook.com/TamilTheHindu | >https://twitter.com/tamilthehindu
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT