Last Updated : 02 May, 2014 12:00 AM

 

Published : 02 May 2014 12:00 AM
Last Updated : 02 May 2014 12:00 AM

திக்விஜய்-அம்ருதா காதலை உறுதிப்படுத்த காரணமான காங்கிரஸ் மாநாடு

காங்கிரஸின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மற்றும் பத்திரிகையாளர் அம்ருதா ராயின் காதலை உறுதிப்படுத்தக் காரணமானது ராஜஸ்தானில் நடந்த காங்கிரஸ் மாநாடு எனக் கருதப்படுகிறது.

தேசிய கட்சிகளின் உள்விவகார செய்திகளைப் பெற அதன் முக்கியத் தலைவர்களுடன் நெருக்கத்தை வளர்த்து கொள்வது டெல்லி பத்திரிகையாளர்களின் வழக்கம்.

இந்த நட்பு ஒரு குறிப்பிட்ட எல்லைகளை தாண்டும்போது காதல் உருவாகும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இதுபோல் உருவானது தான் திக்விஜய்சிங் மற்றும் அம்ருதா ராயின் காதல் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லியின் காங்கிரஸ் கட்சியின் செய்திகள் திரட்டும் பத்திரிகையாளர் வட்டாரம் கூறுகையில், ‘திக்விஜய் சிங்குடன் அம்ருதாவிற்கு இருந்த காதல் விவகாரம் எங்களுக்கு ஜனவரி 2009-ல் தெரிய வந்தது. அந்த வருடம் ராஜஸ்தானின் ஜெய்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் திக்விஜய் சிங்குடன் மிகவும் நெருக்கமாக சுற்றிக் கொண்டிருந்தார் அம்ருதா.’ எனக் கூறுகின்றனர்.

என்.டி.டி.வி.யின் இந்தி சேனலில் செய்தியாளராகப் பணியாற்றிய அம்ருதா, மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த திக் விஜய் சிங்குக்கு அளித்த பேட்டி தான் முதல் சந்திப்பாகும் எனவும் அதன்பின் ராஜ்யசபா டிவிக்கு மாறிய பிறகும் அவரது காதல் தொடர்ந்தது என்றும் பத்திரிகையாளர் வட்டாரம் தெரிவிக்கிறது.

இதன் காரணமாக திக்விஜய் சிங் டொயாட்டா கொராலா காரை அம்ருதாவிற்கு பரிசாக அளித்ததாகவும் கூறப்படுகிறது.

திக்விஜய் சிங்கின் மனைவி இறந்து 6 மாதங்களுக்கு பின் இந்த காதல் விவகாரம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

அவரது குடும்பத்தினர் காட்டிய கடும் எதிர்ப்பையும் திக்விஜய் சிங் பொருட்படுத்தாமல் இருந்திருக்கிறார். இதனால் மத்தியப் பிரதேச எல்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அவரது 27 வயது மகன் ஜெயர்வர்தனா சிங்கிற்கு தந்தையுடன் பேச்சுவார்த்தை இல்லை எனவும் கூறப்படுகிறது.

அம்ருதாவின் கணவரான ஆனந்த் பிரதான் டெல்லியின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு மணமான தகவல் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தபோது அவரது மனைவி பெயருடன் வெளியானது.

இதன் மீது எழுந்த சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் விவகாரம் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

முன்னதாக திக்விஜய் தன் ட்விட்டர் பக்கத்தில், ‘நரேந்திர மோடி தனக்கு மணமானதை ஒத்துக் கொண்டுள்ளார். மனை வியின் உரிமையை மறுப்பவரையும் ஒரு பெண்ணை உளவு பார்ப்பவரையும் நம் நாட்டு பெண்கள் நம்ப முடியுமா மோடிக்கு எதிராக வாக்களியுங்கள்’ என எழுதியிருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x