Published : 19 May 2014 03:06 PM
Last Updated : 19 May 2014 03:06 PM
மத்தியில் புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பாக, பாஜக பொதுச் செயலாளர் அமித் ஷா, கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி உள்ளிட்டோருடன் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
நரேந்திர மோடி, கவுடில்யா மார்கில் உள்ள குஜராத் மாநில அரசு மாளிகையில் தங்கியுள்ளார். அங்குதான் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அருண் ஜேட்லி மக்களவை தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், அவரை அமைச்சரவையில் இணைப்பது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்றதாக தெரிகிறது.
முன்னதாக, மோடியை பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தார். நரேந்திர மோடிக்கும் சுஷ்மா ஸ்வராஜூக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், இன்று இருவரும் சந்தித்துள்ளது அக்கட்சி வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சுஷ்மாவை தவிர உ.பி. முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங்கும் இன்று நரேந்திர மோடியை சந்தித்தார்.
இதே போல் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கும் பாஜக எம்.பி.க்கள் பலர் படையெடுத்தனர். உமா பாரதி, வருண் காந்தி உள்ளிட்டோர் இன்று ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் சென்றனர்.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேட்கர் கூறுகையில், "நாளை பாஜக ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில் அனைத்து எம்.பி.க்களும் கலந்து கொள்வர். அதற்கு முன்னதாக மரியாதை நிமித்தமாகவே ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெறுகிறதே தவிர இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.
புதிய அரசு அமைப்பது தொடர்பாக நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் மட்டுமே பேச்சுவார்த்தையில் இடம் பெற்றுள்ளனர். மற்ற சந்திப்புகள் வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே" என்றார்.
மோடியை சந்திக்கிறார் உள்துறை செயலர்:
இதற்கிடையில், பிரதமர் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியை உள்துறை செயலர் அனில் கோஸ்வாமி சந்திக்கவுள்ளார். நாட்டின் பிரதான பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து மோடியிடம் அவர் எடுத்துரைப்பார் என தெரிகிறது. இது தவிர தெலங்கானா மாநிலம் அமைப்பது, டெல்லி சட்டமன்ற தேர்தல் குறித்தும் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்நாத் சிங் - வைகோ சந்திப்பு:
இதற்கிடையில், மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் இன்று அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து வாழ்த்து கூறினார்.
இதேபோல் லோக்ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், தனது மகன் சிராக் பஸ்வானுடன், ராஜ்நாத் சிங்கை சந்தித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT