Published : 03 May 2014 08:59 AM
Last Updated : 03 May 2014 08:59 AM
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பிரியங்கா காந்தி தினமும் தரம் குறைந்த வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். அவர் தனது விமர்சனங்களால், ராகுல் காந்தியை அரசியல் களத்தில் இருந்து ஓரங்கட்டி விட்டார் என்று பாஜக தலைவர் அருண்ஜேட்லி கூறினார்.
டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்த ஜேட்லி இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், “மூன்றாவது அணி என்பது வெறும் பேச்சு. அவர்களால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. நாட்டின் ஸ்திரத்தன்மை, வளர்ச்சியை கருத்தில் கொண்டு பாஜக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று கேட்கிறீர்கள். உங்களை மகிழ்விக்கும் வகையில் பதிலளிக்கிறேன். தமிழகத்தில் பாஜக கூட்டணி கணிசமான இடங்களைப் பெறும்.
காங்கிரஸ் அல்லாத கட்சிகளும் கணிசமான இடங்களைப் பெறும்” என்றார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் போன்றோர் அப்பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, “பாஜக கூட்டணி தனிப்பட்ட நபர்களைப் பற்றி கவலைப்படவில்லை. ஆட்சிக்கு வந்தால் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ளும்” என்றார்.
லோக்பால் உறுப்பினர் நியமனம் குறித்து கருத்து தெரிவித்த ஜேட்லி, “லோக்பால் அமைப்பில் பொறுப்பு ஏற்க முடியாது என்று நீதிபதிகள் கடந்த 5 மாதங்களாக ஒருவர் பின் ஒருவராக மறுத்து வருகின்றனர்.
மேலும் தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால் லோக்பால் நியமனங்கள் எதையும் காங்கிரஸ் அரசு செய்தால் அது சட்ட விரோதமாக அமையும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT