Published : 06 May 2014 12:32 PM
Last Updated : 06 May 2014 12:32 PM

நான் தேநீர் விற்றேனே தவிர தேசத்தை அல்ல: நரேந்திர மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் தோமாரியாகஞ்சில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தான் தேநீர் மட்டுமே விற்றதாகவும் தேசத்தை ஒரு போதும் விற்றதில்லை என்றும் கூறினார்.

மோடி பேசியதாவது: "நரேந்திர மோடி எனும் தனி நபரை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். மோடியை தூக்கில் கூட போடலாம். ஆனால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை விமர்சிக்க வேண்டாம். நான் தேநீர் விற்றதற்காக மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். தேநீர் விற்பது பெரும் குற்றம் போல் பேசப்பட்டது. தேநீர் விற்றவர் எப்படி தேசத்தை ஆள்வார் என கேள்வி எழுப்பப்பட்டது. தேநீர் விற்பது ஒன்றும் கிரிமினல் குற்றம் இல்லையே. நான் தேநீர் விற்றேனே தவிர தேசத்தை விற்கவில்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறப்பது என்ன குற்றமா?" என பேசினார்.

முன்னதாக தனது ட்விட்டர் வலை பக்கத்தில் பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில கருத்துகளையும் அவர் பதிவு செய்திருந்தார்.

அதில், கடைநிலை அரசியலே இந்திய தேசத்தை தவறான ஆட்சியில் இருந்து காப்பாற்றும் என அவர் தெரிவித்திருந்தார்.

அண்மையில் அமேதியில் தனது சகோதரர் ராகுல் காந்தியை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, தனது தந்தையின் உயிர் தியாகத்தைக் கூட சில கட்சிகள் கீழ்த்தரமாக அரசியலாக்குவதாக பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மோடி தனது ட்விட்டர் வலை பக்கத்தில்: "நான் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். எனவே என் அரசியலும் கடைநிலை மக்களுக்கானதாகவே இருக்கும். இத்தகைய கடைநிலை அரசியல் தான், 60 ஆண்டுகளாக நடைபெறும் தவறான ஆட்சியின் பிடியில் இருந்து இந்திய தேசத்தை மீட்கும். இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள தொண்டு பலருக்கு புரிவதில்லை" என பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x