Published : 17 May 2014 10:05 AM
Last Updated : 17 May 2014 10:05 AM

குஜராத்தை முழுமையாகக் கைப்பற்றியது பாஜக: 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அத்வானி வெற்றி

குஜராத்திலுள்ள 26 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக முழுமை யாகக் கைப்பற்றியது. பெரும்பா லான பாஜக வேட்பாளர்கள் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

பாஜகவின் ராடாடியா போர்பந்தர் தொகுதியில், தேசிய வாத காங்கிரஸ் வேட்பாளர் கந்தால் ஜடேஜாவை 2.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கந்தால் ஜடேஜா, நிழலுலக தாதா சந்தோக் பென் ஜடேஜாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்கோட்டில் காங்கிரஸின் தற்போதைய எம்.பி. குவேர்ஜி பவாலியா, பாஜகவின் மோகன் குந்தாரியாவிடம் 2.46 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

கே.சி. படேல் வல்சாத் தொகுதியை, காங்கிரஸின் தற்போதைய எம்.பி. கிஷன் படேலிடம் இருந்து பறித்தார்.

அத்வானி

காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் அத்வானி காங்கிரஸின் கிரித் படேலை 4 லட்சத்து 63 ஆயிரத்து 121 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மத்திய அமைச்சர்கள் தோல்வி

கேடா தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் தின்ஷா படேல் பாஜகவின் தேவுசிங் சவுகானிடம் 2.32 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

மத்திய குஜராத்திலுள்ள ஆனந்த் தொகுதி காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்பட்டது. இங்கு போட்டியிட்ட மத்திய அமைச்சர் பாரத் சோலங்கி, திலிப் பட்டேலிடம் 63 ஆயிரத்து 426 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

குஜராத் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சங்கர் சிங் வஹேலா, சபர்காந்தா தொகுதியில் தீப்சிங் ரதோடிடம் தோல்வியடைந்தார்.

குஜராத்தில் பாஜக 59.1 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 32.9 சதவீத வாக்குகளையும் கைப்பற்றியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x