Published : 05 May 2014 08:27 PM
Last Updated : 05 May 2014 08:27 PM

அமேதியில் மோடி ஆவேசம்: சோனியா, ராகுல் மீது தாக்கு

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்ட மோடி, 'மத்தியில் வலிமையான ஆட்சி வேண்டுமா அல்லது தாய் - மகனின் ரிமோட் மூலம் இயங்கும் போலியான அரசு வேண்டுமா?' என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.

இதனிடையே, பைசாபாத் பொதுக் கூட்ட மேடையின் பினனணியில் ராமர் படம் இருந்ததும், 'ராமர்' தொடர்பாக மோடி பேசியதும் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் மோடி இன்று (திங்கள்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார்.

அமேதியில் ராகுலை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணிக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்தார்.

முன்னதாக, பைசாபாத் தொகுதியில் லல்லு சிங்கை ஆதரித்து மோடி பேசியது: "கடந்த காலத்தில் காங்கிரஸ், நாட்டில் அழிவு அரசியலை நடத்திவிட்டது. தற்போது நம் தேவை ஒருங்கிணைப்பு அரசியல்தான். ஆரோக்கியமான அரசியல் மூலம்தான் மக்களிடையே இன ஒற்றுமையை உருவாக்க முடியும்.

மத்தியில் மோசமான ஆட்சி அமைய, தாயும் மகனுமே (சோனியா, ராகுல்) காரணம். உத்தரப் பிரதேசத்தில் உள்ள மோசமான ஆட்சிக்கு தந்தையும் மகனும் (முலாயம், அகிலேஷ்) காரணம்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகளை மக்கள் தோற்கடிக்க வேண்டும். மக்களை காங்கிரஸ் கைவிட்டுவிட்டது. தேர்தல் அறிக்கையை மட்டும் அளித்து துரோகம் செய்துவிட்டது. 2009-ம் ஆண்டு, காங்கிரஸ் 10 கோடி மக்களுக்கு வேலை அளிப்பதாக கூறியது. நான் இப்போது உங்களை கேட்கிறேன்... உங்களில் யார் அந்த வகையில் வேலை பெற்றவர்கள்? ராமர் பிறந்த பூமியில் பிறந்த மக்கள் வாழ்க்கையை இழந்தாலும், வார்த்தை அளித்து ஏமாற்றியவர்களை மன்னிக்க மாட்டார்கள்.

வாஜ்பாயின் 6 ஆண்டு ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் 6.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. குஜராத்தால் வளர்ச்சியடை முடியும்போது, அது ஏன் உத்தரப் பிரதேசத்தால் முடியாது? அதற்கு தந்தையும் மகனும் செய்யும் போக்கிரித்தனத்தை கைவிட வேண்டும். ஒரு ஆண்டில் 5000 கொலை வழக்குகள் இங்கு பதிவாகியுள்ளன. இதற்கு விடைகான இருவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உத்தரத் பிரதேசத்தை குஜராத் போல மாற்ற வேண்டும். ஆட்சி என்றால் அதன் மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும். உங்களுக்கு எந்த மாதிரியான ஆட்சி வேண்டும்? வலிமையான அரசா அல்லது தாய் - மகனின் ரிமோட் மூலம் போலி ஆக்ஸிஜன் கொண்டு இயங்கும் போலியான அரசா? நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

பைசாபாத்தைத் தொடர்ந்து, பிரச்சாரம் ஓய்வதற்கு முன்பாக அமேதியில் இராணியை ஆதரித்துப் பேசிய நரேந்திர மோடி, "நான் இங்கு பழிவாங்குவதற்காக வரவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக காந்தி குடும்பத்தால் நிராகரிக்கப்பட்ட இந்தத் தொகுதியில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக வந்திருக்கிறேன். குடும்ப உறவை முன்வைக்கிறார்களே தவிர, உங்கள் முன்னேற்றத்துக்கு எதுவுமே செய்யவில்லை.

என் பிரதிநிதியாக இங்கு என் இளைய சகோதரி இராணி வேட்பாளராக நிற்கிறார்கள். ஒரு குடும்பத்துக்கும் இந்தத் தொகுதிக்குமான உறவு முடிவுக்கு வரும் தருணம் இது. இங்குள்ள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

தாயும் மகனும் பாவங்களைச் செய்திருக்கிறார்கள். 40 ஆண்டுகளாக, மூன்று தலைமுறை மக்களின் கனவு இங்கே நசுக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய கனவுகளை என்னுடைய கனவாகவும், உங்களுடைய வலிகளை என்னுடைய வலிகளாக மாற்றவும் நான் இங்கு வந்திருக்கிறேன்" என்றார் நரேந்திர மோடி.

'ராமர்' பேச்சால் சர்ச்சை - அறிக்கை கேட்ட தேர்தல் ஆணையம்

இதனிடையே, பைசாபாத்தில் ராமர் தொடர்பாக மோடி பேசியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மோடி பிரச்சாரம் செய்த மேடையின் பின்னணியில் ராமர் படம் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன், அவர் பிரச்சாரத்தின்போது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காங்கிரஸ் கட்சிக்கு ராமர் பிறந்த பூமியில் வசிக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினார். தனது பேச்சின்போது ராமரின் பெயரை அவர் அடிக்கடி உச்சரித்தார்.

இதன் தொடர்ச்சியாக, போதுக்கூட்ட மேடையின் பின்னணியில் ராமர் படம் இருந்தது தொடர்பாகவும், 'ராமர்' பேச்சு குறித்தும் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. இத்தகவலை உத்தரப் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா உறுதிபடுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x