Published : 08 May 2014 08:54 AM
Last Updated : 08 May 2014 08:54 AM
தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் 6-ம் தேதியிலிருந்து வாரணாசி தொகுதியில் மோடிக்காக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொன்.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் குப்புராமு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளிதரன் மற்றும் தென்சென்னை, மத்திய சென்னை, வட சென்னை மாவட்ட பாஜக தலைவர்கள் உள்ளிட்ட 12 பேர் வாரணாசியில் மோடிக்காக வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாரணாசி நகரில் உள்ள கேதார் காட், அனுமன் காட் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் தமிழர்கள் வசிக்கிறார்கள். செவ்வாய்க்கிழமை இந்தப் பகுதிகளில் நடந்தே சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர் தமிழக பாஜக குழுவினர்.
புதன்கிழமை, வாரணாசியை அடுத்துள்ள 3 கிராமங்களில் இந்தக் குழுவினர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர், இதுகுறித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளிதரன் ’தி இந்து’விடம் கூறியதாவது: வாரணாசியில் நகர்ப் பகுதிகளில் மோடிக்கு அமோக ஆதரவு இருக்கிறது. கிராமங்களில் சில இடங்களில் குறைந்த அளவில், மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
புதன்கிழமை காலையில் ஸ்ரீகோவர்தன்பூர் கிராமத்துக்கு வாக்குச் சேகரிக்கச் சென்றோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அதிகம் வசிக்கும் அந்தக் கிராமத்தில் சமுதாய தலைவர் அசோக்குமாரை சந்தித்தோம். அசோக்குமார் அவருடைய வீட்டுக்கு விருந்தாளியாக எங்களை அழைத்துச் சென்றார்.
அவருடைய உபசரிப்பில் நெகிழ்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் காலில் விழுந்து வணங்கி ஓட்டு கேட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத அசோக்குமார், நெகிழ்ந்து போய் அப்படியே பொன்.ராதாகிருஷ்ணனை தூக்கி நிறுத்தி கட்டித் தழுவிக் கொண்டார். பிறகு, “எங்கள் ஓட்டு மோடிக்குத்தான்.. தைரியமாக போய் வாருங்கள்” என்று சொல்லி எங்களை வழியனுப்பினார். அந்த கிராமத்தில் அவர் சொன்னால் 300 ஓட்டுகள் தப்பாமல் தாமரைக்கு விழும். நாங்கள் இருக்கும்போதே மற்றவர்களை அழைத்துப் பேசி அதை உறுதியும் செய்துவிட்டார் அசோக்குமார்.
இவ்வாறு முரளிதரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT