Published : 07 May 2014 09:42 AM
Last Updated : 07 May 2014 09:42 AM
இன்று தேர்தலை சந்திக்கும் அமேதி மக்களவை தொகுதியில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும், அவரது வாக்கு வித்தியாசம் குறையும் என்று கருதப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் ஸ்மிருதி ராணி, ஆம் ஆத்மி கட்சி யின் குமார் விஸ்வாஸ் ஆகியோர் ராகுலுக்கு கடும் போட்டியாக இருப்பதே இதற்கு காரணம்.
உ.பி.யின் அமேதி தொகுதி கடந்த 1980 முதல் காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பத்தின் தொகுதியாக இருந்து வருகிறது. இடையில் ஒருமுறை காங்கிரஸுக்கு எதிரான அலை காரணமாக, 1998-ல் அமேதியில் பாஜகவின் சஞ்சய்சிங் வெற்றி பெற்றார். இதன் பிறகு தொடர்ந்து இத்தொகுதி காங்கிரஸ் வசமே உள்ளது.
இங்குள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 3 பகுஜன் சமாஜ் வசமும், 2 சமாஜ்வாதி கட்சி வசமும் உள்ளது. இருப்பினும் எம்.பி. தேர்தலில் மட்டும் காங்கிரஸுக்கு சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்து வருகிறது. 2009-ல் 3,70,198 வாக்குகள் வித்தியாசத்திலும், 2004-ல் 2,90,853 வாக்குகள் வித்தியாசத்திலும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ராகுல் தோற்கடித்தார். ஆனால் இந்தமுறை ராகுல் வெற்றி பெற்றாலும், வாக்கு வித்தியாசம் அதிகம் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியினர் ‘தி இந்து’விடம் கூறுகையில், “அமேதியில் முதல் வேட்பாளராக குமார் விஸ்வாஸ் தொகுதியில் வந்து தங்கி பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது முதல் காங்கிரஸ் கட்சியினர் எங்கள் கட்சியினர் மீது தாக்குல் நடத்தி வருகின்றனர். இப்போது குமார் விஸ்வாஸின் குடும்பத்தினருக்கு இங்கு வாக்குரிமை இல்லை என்று அவர்களை அமேதியை விட்டு வெளியேறும்படி காவல்துறை மிரட்டுகிறது. இதுபோன்ற செயல்கள் ராகுலின் தோல்வி பயத்தையே காட்டுகிறது. நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் ராகுலின் வாக்குகள் நிச்சயம் குறையும்” என்றனர்.
குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந் தெடுக்கப்பட்ட ஸ்மிருதி ராணி, அமேதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு வெற்றி வாய்ப்பில்லை எனத் தெரிந்தே களம் இறக்கி விடப்பட் டாலும், மோடியின் அமேதி வரவு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
இதுகுறித்து அமேதி பாஜக வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறுகையில், “இங்கு காங்கிரஸ் பொறுப்பாளர்களின் செயல் பாடுகள் அரசு அதிகாரிகளைப் போல் உள்ளது. ராகுல் உட்பட யாருமே மக்களிடம் நெருங்கிப் பழகி பிரச்சினைகளை கேட் பதில்லை. இதனால் இங்கு இம்முறை காங்கிரஸ் எதிர்ப்பு அலை வீசுகிறது. வெறும் 4 நாட்களில் திடீர் என முடிவுசெய்து மோடி அமேதிக்கு வந்தது ஸ்மிருதி ராணிக்கு வெற்றி தேடித்தர வில்லை என்றாலும் ராகுலுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும்” என்றது.
கடந்த திங்கள்கிழமை அமேதியில் மோடி பங்கேற்ற கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டதாக கூறப்படு கிறது.
ஆம் ஆத்மி கட்சியினர் மீது வழக்கு
அமேதியில் ஆம் ஆத்மி கட்சியின் சோம்நாத் பாரதி, குமார் விஸ்வாஸ் உள்ளிட்ட சுமார் 40 பேர் மீது மாவட்ட நிர்வாகம் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தது.
அமேதியில் தேர்தல் பிரச்சாரம் திங்கள்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. இந்நிலையில் அன்று நள்ளிரவு ஆம் ஆத்மி கட்சியினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகராறு செய்ததாகவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் குமார் விஸ்வாஸ் கூறுகையில், “பிரச்சாரம் முடிந்தபின், வாக்காளர்களாக இல்லாதவர்கள் இங்கு இருக்கக் கூடாது என எனது குடும்பத்தினரை போலீஸார் மிரட்டினர். ஆனால் காங்கிரஸ் மற்றும் பாஜகவினரை இவ்வாறு வெளியேற்ற முயலவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT