Published : 08 May 2014 05:40 PM
Last Updated : 08 May 2014 05:40 PM

தேர்தல் ஆணையம் கடமை தவறிவிட்டது: மோடி குற்றச்சாட்டு

வாரணாசியில் தனது பிரச்சாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, தேர்தல் ஆணையம் தனது நடுநிலைத் தன்மையை மறந்துவிட்டதாகவும், கடமையில் இருந்து தவறிவிட்டதாகவும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசியில், அவரது கூட்டம் ஒன்றுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், பொதுக்கூட்டத்தை மாற்று இடத்தில் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று உத்தரப் பிரதேசத்தின் அசம்கரில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக தாக்கிப் பேசினார்.

"முதலில் நான் கங்கைத் தாயிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் அவருக்கு ஆரத்திக் கூட காட்டமுடியவில்லை.

கடந்த 3 கட்டங்களாகவே தேர்தல் ஆணையம் தனது கடமையை சரியாக செய்யவில்லை. இது தொடர்பாக ஏப்ரல் 24-ம் தேதியே நான் எச்சரித்தேன். தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல் எனது எதிர்காலத்தையோ, தேர்தல் முடிவுகளையோ மாற்றாது. இது குறித்து சில நாட்களாகவே நான் குரல் எழுப்பி வருகிறேன்.

தேர்தல் ஆணையம் பாரபட்சமாகவே செயல்படுகிறது. தேர்தல் நடவடிக்கைகள் முறையாகவா நடக்கிறது? கடந்த 3 கட்டங்களாக தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது.

அரசு என்பது மக்களை காக்க வேண்டும். நாடு முன்னேற வேண்டுமானால், அதற்கான தேவையான நடவடிக்கைகளை மட்டுமே ஒரு அரசு எடுக்க வேண்டும்.

நாடு வளர விவசாயம் செழிக்க வேண்டும். விவசாயிகள் வாழ்வில் முன்னேற வேண்டும். அப்போதுதான் கிராமங்கள் வளம் பெறும். ஆனால், இங்கு விளைந்த கரும்புகளை வயல்வெளிகளிலேயே விவசாயிகள் தீயிட்டு கொளுத்தும் நிலை இருக்கிறது.

இந்த நிலைக்கு காரணம் யார்? உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸும் சமாஜ்வாடியும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும். ஆனால் டெல்லியில் ரகசிய உடன்பாடில்தான் இருக்கின்றன" என்றார் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x