Published : 17 May 2014 10:11 AM
Last Updated : 17 May 2014 10:11 AM
மக்களவைத் தேர்தலில் உபியின் 80 தொகுதிகளில் 71 தொகுதிக ளைக் கைப்பற்றி பாஜக சாதனை படைத்துள்ளது. இங்கு காங்கிர ஸிற்கு வெறும் இரண்டு இடங்களும் ஆளும் சமாஜ்வாதிக்கு ஐந்து இடங்களும் கிடைத்துள்ளன.
உபியை குறி வைத்து பிரச்சாரம் செய்த நரேந்திர மோடியின் உழைப்பு வீணாகவில்லை. இதற்காக, முன்கூட்டியே திட்டமிட்டு மோடி தனது நெருங்கிய சகாவான குஜராத்தின் முன்னாள் அமைச்சர் அமித்ஷாவை மாநில பொறுப்பாளராக்கினார்.
உபியில் 2009-ல் காங்கிரஸ் 22, சமாஜ்வாதி 21, மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி 21 பெற்றிருந்தன. பாஜக கடந்த இரு தேர்தல்களிலும் பெற்றது வெறும் பத்து தொகுதிகள் மட்டுமே.
1984-ல் இந்திரா காந்தியின் படுகொலைக்கு பின் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸிற்கு 83 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. இதுதவிர சுதந்திரத்திற்கு பிறகு உபியில் எந்த கட்சிக்கும் பாஜகவிற்கு கிடைத்த அளவுக்கு அதிகமான தொகுதிகள் கிடைத்ததில்லை எனக் கருதப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலம் தனியாக பிரியாத நிலையில் 1998-ல் நடந்த தேர்தலில் உபியில் பாஜகவுக்கு 57 இடங்கள் கிடைத்தன. இதையெல்லாம் முறியடித்து இந்த முறை உ.பியில் பாஜக 71 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இங்கு போட்டியிட்ட முக்கிய தலைவர்களில் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவரான ராஜ்நாத்சிங் லக்னோவிலும், மூத்த தலைவரான மேனகா காந்தி பிலிபித்திலும், அவரது மகனான பெரோஸ் வருண் காந்தி சுல்தான்பூரிலும், ஜான்சியில் உமாபாரதி, கான்பூரில் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரசின் இருதொகுதிகள்
ரேபரேலியில் சோனியா காந்தியும் அமேதியில் ராகுல் காந்தியும் வெற்றி பெற்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கு இந்தமுறை ஒரு தொகுதி கூட கிடைக்க வில்லை.
முலாயமின் குடும்பத்தினர் வெற்றி
சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம்சிங் மெயின்புரியிலும், அவரது மருமகளான டிம்பிள் யாதவ் கன்னோஜிலும், முலாயமின் மூத்த சகோதரரின் மகனான தர்மேந்தர் யாதவ் பதாயூவிலும் வெற்றி பெற்றனர். மற்றொரு மூத்த சகோதரரின் மகனான 27 வயது அக்ஷய் யாதவ், பெரோசாபாத்தில் வெற்றி பெற்றார்.
அஜித்சிங் தோல்வி
பாக்பத்தில் ராஷ்டிரிய லோக்தளக் கட்சியின் தலைவரான அஜித்சிங் மற்றும் அவரது மகன் ஜெயந்த் சௌத்ரி ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களின் கட்சியில் தேர்தலுக்கு சற்று முன்பாக இணைந்து பிஜ்னோரில் போட்டியிட்ட நடிகை ஜெயப்பிரதா மற்றும் இதில் புதிதாக இணைந்த அமர்சிங்கும் படுதோல்வி அடைந்துள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் தோல்வி
உபியில் போட்டியிட்ட காங்கிர ஸின் ஆறு மத்திய அமைச்சர் களும் படுதோல்வி அடைந்துள்ள னர். பரூக்காபாதில் சல்மான் குர்ஷித்திற்கு ஐந்தாவது நிலை கிடைத்துள்ளது. மத்திய உள்துறை யின் இணை அமைச்சரான ஆர்.பி.என்.சிங், நிலக்கரித்துறை அமைச்சர் பிரகஷ் ஜெய்ஸ்வால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் வேணி பிரசாத் வர்மா, கோண்டாவிலும், ஜித்தின் பிரசாத் தவ்ரஹா தொகுதியிலும், பிரதீப் ஜெயின் ஆதித்யா ஜான்சியிலும் மூன் றாவது நிலைக்கு தள்ளப்பட் டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT