Published : 11 May 2014 12:00 AM
Last Updated : 11 May 2014 12:00 AM

மக்களவைத் தேர்தல்: இறுதிப் பிரச்சாரம் நிறைவு- 41 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு 41 தொகுதிகளுக்கு நாளை நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், பிஹார் மாநிலங்களில் சனிக்கிழமை மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

9 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலுக்காக, கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தலைவர்கள் மேற்கொண்டி ருந்த சூறாவளிப் பிரச்சாரம் சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.

இதுவரை நடைபெற்ற 8 கட்டங்களில் மொத்தம் 502 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்துவிட்டது. மீதமுள்ள 41 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கிறது.பிஹாரில் 6 தொகுதி களிலும், உத்தரப் பிரதேசத்தில் 18 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இது தவிர, மேற்குவங்கத்தில் 2 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இடையே பலத்த போட்டி காணப் படுகிறது. இங்கு காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார்.

பிரச்சாரம் ஓய்ந்தது

9-வது கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் சனிக்கிழமை நிறைவுபெற்றதையடுத்து, வாரணாசி உள்ளிட்ட பல தொகுதிகளில் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வாரணாசியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணி நடைபெற்றது. உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் அந்நகரில் தீவிரப் பிரச்சாரம் செய்தனர்.

இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சாரத்திற்கு தலைமை வகித்த மோடி, டீ கடைகளில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரச்சாரம், 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் பல இடங்களில் பிரச்சாரம் என கலக்கினார்.

காங்கிரஸ் தரப்பில் அதன் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு உறுதுணையாக தாயார் சோனியா காந்தியும், சகோதரி பிரியங்காவும் பிரச்சாரம் செய்தனர்.

வாக்கு எண்ணிக்கை

மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்றது. அதையடுத்து, இதுவரை 8 கட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. மொத்தம் 502 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், வாக்கும் எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளன.

வரும் திங்கள்கிழமை 41 தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற பின், மே 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அன்று மாலைக்குள் அனைத்து முடிவுகளும் அறிவிக் கப்பட்டுவிடும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x