Published : 07 May 2014 08:47 AM
Last Updated : 07 May 2014 08:47 AM

சீமாந்திராவை ஆளப்போகும் முதல்வர் யார்?- 40 ஆயிரம் மையங்களில் விறுவிறு வாக்குப்பதிவு

ஆந்திர மாநிலத்தில் உள்ள சீமாந்திரா மாவட்டங்களில் 25 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வரும் ஜூன் 2-ம் தேதி தெலங்கானா புதிய மாநிலம் உருவாகிறது. இந்நிலையில் சீமாந்திராவை ஆளப்போகும் முதல்வரை மக்கள் இன்று தேர்தெடுக்கின்றனர்.

இத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது தெலுங்கு தேசம் கட்சி. கடந்த மாதம் 19-ம் தேதி முதல் இக்கட்சிகளின் தலைவர்கள் சீமாந்திராவில் தீவிரப் பிரச்சாரம் செய்தனர். இவர்களுக்கு ஆதரவாக ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாணும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் இதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, இவரது தாயார் விஜயலட்சுமி, தங்கை ஷர்மிளா ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். மாநிலப் பிரிவினை தொடர்பாக காங்கிரஸ் கட்சி மீது மக்களிடையே அதிருப்தி நிலவுவதால் தெலுங்கு தேசம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இடையேதான் போட்டி நிலவுகிறது.

இன்றைய தேர்தலில் சந்திரபாபு நாயுடு (குப்பம்), ஜெகன் மோகன் ரெட்டி (புலிவேந்தலா), நடிகர் பாலகிருஷ்ணா (ஹிந்துபுரம்), நடிகை ரோஜா (நகரி), மத்திய அமைச்சர் புரந்தரேஸ்வரி (ராஜம்பேட்டை) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.

40,708 வாக்குச்சாவடிகள்

தேர்தலையொட்டி சீமாந்திரா முழுவதும் 40,708 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். எனினும் நக்சலைட் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் வாக்குப் பதிவு மாலை 4 மணியுடன் முடிந்துவிடும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு பணிகளுக்காக 1.22 லட்சம் போலீஸார், 272 துணை ராணுவப் படைப் பிரிவினர் தயார் நிலையில் உள்ளனர். 4 ஹெலிகாப்டர்களும் தயாராக உள்ளன. மாநில எல்லைகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரூ.148 கோடி பறிமுதல்

இதுவரை ரூ. 148 கோடி ரொக்கம், 90 கிலோ தங்கம், 825கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 29,675 தேர்தல் விதிமீறல் வழக்குகளும், 5,935 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில டி.ஜி.பி. பிரசாத் ராவ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x