Published : 06 May 2014 10:44 AM
Last Updated : 06 May 2014 10:44 AM

மோடியின் ‘ராமர்’ பேச்சு: அறிக்கை கோருகிறது தேர்தல் ஆணையம்

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ராமர் தொடர்பாக பேசியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் பைஸாபாத் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி பங்கேற்றார். இந்த பொதுக்கூட்ட மேடையின் பின்னணி பேனரில் ராமர் படம் அச்சிடப்பட்டிருந்தது. மேலும் தனது பேச்சின்போது ராமரின் பெயரை மோடி அடிக்கடி குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து உத்தரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியபோது, மோடியின் பேச்சு, மேடையின் பேனர் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரியை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.

ராமரின் பெயரால் உறுதி

முன்னதாக பைஸாபாதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: இது ராமரின் பூமி. இந்த மண்ணில் நின்று மக்களுக்கு நான் ஓர் உறுதிமொழி அளிக்கிறேன். எனது வாழ்நாள் முழுவதும் ஊழலுக்கு எதிராகப் போராடுவேன்.

ஒருவர் உயிரைக்கூட இழக்கலாம். ஆனால் கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாது. காங்கிரஸ் ஆட்சியில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக் கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை.

ராமர் பிறந்த பூமியில் பிறந்த நீங்கள், வாக்குறுதியைக் காப்பாற்றாத காங்கிரஸுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் எதிரிகளாகப் போட்டியிடுகின்றன. ஆனால் டெல்லியில் 3 கட்சிகளும் நண்பர் களாக உள்ளன. மத்தியில் தாய்- மகன் (சோனியா- ராகுல்) ஆட்சியைக் காப்பாற்ற சமாஜ் வாதியும் பகுஜன் சமாஜும் ஆதரவு அளிக்கின்றன.

அதற்குப் பிரதிபலனாக சிபிஐ விசாரணையில் இருந்து இந்தக் கட்சிகளின் தலைவர்களை காங்கிரஸ் காப்பாற்றுகிறது.

இவ்வாறு மோடி பேசினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து கூட்டத்தில் மோடி எதுவும் பேசவில்லை.

அமேதியில் மோடி பிரச்சாரம்

அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராகப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியை ஆதரித்து மோடி பிரச்சாரம் செய்தார்.

அவர் பேசியபோது, குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும், பழிவாங்கும் அரசியலில் ஈடுபடமாட்டேன் மக்களுக்கு வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பாடுபடுவேன் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x