Published : 29 Apr 2014 06:29 PM
Last Updated : 29 Apr 2014 06:29 PM
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பற்றிய, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தாக்குதல்கள் சிறுபிள்ளைத்தனமானவை என்று காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர் பிரியங்கா காந்தி சாடினார்.
ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதிக்குட்பட்ட தீஹ் என்ற இடத்தில் பிரியங்கா நேற்று பேசியதாவது: எனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி நம் நாட்டில் கம்யூட்டரை அறிமுகம் செய்தபோது, பாஜக தலைவர்கள் கேலி செய்தனர். அவர்கள் இப்போது எனது தம்பி ராகுல் காந்தியை கேலி செய்கின்றனர்.
ராகுலை சில நேரம் அவர்கள் காமெடியன் என்கின்றனர். சில நேரம் இளவரசன் என்கின்றனர். நாட்டின் பிரதமராக பதவியேற்க விரும்பும் ஒருவருக்கு ஏன் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான பேச்சு? மோடி தனது பேச்சில் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்.
பாஜகவின் கொள்கைகள் நாட்டில் அழிவை ஏற்படுத்தக் கூடியவை. உங்கள் நலன், அமேதியின் தொகுதியின் நலன் கருதி நீங்கள் வாக்களிக்க வேண்டாம். நாட்டுக்கு எத்தகைய அரசியல் வேண்டும் என்ற செய்தி இங்கிருந்து செல்லவேண்டும். நாட்டுக்கு தூய்மையான அரசியல் வேண்டும். அமேதியில் மின்சாரம் இல்லை, வளர்ச்சி இல்லை என்று பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி குற்றம் சாட்டுகிறார்.
மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு அரசுகள் உள்ளன. சில நேரங்களில் இதனால் சங்கடங்கள் ஏற்படுகின்றன. மின்சார விநியோகம் மாநில அரசின் பணி. உத்தரப்பிரதேச அரசு இங்கு மின்சார விநியோ கத்தை நிறுத்தியபோது, பாஜக தலைவர்கள் லக்னோவில் போராட்டம் நடத்தினர். ஆனால் இப்போது அமேதியில் மின்சாரம் இல்லை என்று பாஜக வேட்பாளர் நாடகமாடுகிறார்.
மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ ஆட்சியில் இல்லாத ஆம் ஆத்மி கட்சியால் இங்கு எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவர முடியாது. இத் தொகுதிக்கு ராகுல் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பாதிக்கும் மேற்பட்ட திட்டங்கள், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. பாஜக தலைவர்கள் இங்கு வரும்போது, இப்பகுதி முன்னேற்றத்துக்கு ஏதேனும் திட்டங்கள் வைத்திருக் கிறீர்களா என்று கேளுங்கள். மக்கள் விழிப்புடன் இருந்தால் அரசியல்வாதிகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள் என்றார் பிரியங்கா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT