Published : 28 Apr 2014 08:19 PM
Last Updated : 28 Apr 2014 08:19 PM

வதேராவுக்கு ஆதரவாக மோடி மீது அகிலேஷ் கடும் தாக்கு

நில பேர விவகாரத்தில், பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு ஆதரவாக பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், மோடி தேசத்தில் பிரிவினையை ஏற்படுத்த விரும்புவதாக குற்றம்சாட்டினார்.

ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான அரசுகள், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு முறைகேடாக நிலம் வாங்குவதற்கு உதவி செய்ததாகவும், அதன்மூலம் அவர் ரூ.300 கோடி லாபம் ஈட்டியதாகவும் பாஜக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டது.

வதேராவை முன்வைத்து, காங்கிரஸுக்கு எதிராக மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், இவ்விவகாரத்தை பாஜக தேவையற்றுப் பெரிதாக்குகிறது என உத்தரப் பிரதேச முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மகனுமான அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று உத்தரப் பிரதேசத்தின் ஜெயித்பூரில் பிரச்சாரத்தின் போது, எவர் பெயரையும் குறிப்பிடாமல் பேசினார்.

அப்போது, "பாஜக தேவையே இல்லாமல் நிலப் பிரச்சினையை ஊதிப் பெரிதுபடுத்தி வருகிறது. ஒரு பகுதியின் வளர்ச்சிக்காக குறிப்பிட்ட திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தொழில் நிறுவனங்களுக்கு நிலத்தை ஒதுக்குவதை ஆட்சி அதிகாரத்துக்கு வரும் எந்தக் கட்சியும் மேற்கொள்வது இயல்புதான்.

மக்களவை வேறு பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பவே, இந்த நிலப் பிரச்சினையை பாஜக வேண்டுமென்றே பெரிதுபடுத்தி வருகிறது.

நிலம் கையகப்படுத்துவதற்காக அரசு உரிய விதிமுறைகளை வகுத்திருக்கும் நிலையில், யாரும் வலுக்கட்டாயமாக நிலத்தைப் பறிக்கவோ, கடனை வசூலிக்க ஏலத்தில் விடவோ முடியாது" என்றார்.

மோடியை கடுமையாகத் தாக்கிப் பேசியவர், "மோடியின் முழு உருவம் மக்களுக்குத் தெரியாது. அவர் இந்தியாவைப் பிரிவினைக்கு உள்ளாக்குகிறார். சாதி, மதத்தை வைத்து தேசத்தைப் பிரிக்க விரும்புகிறார்.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்புகள் தந்த அழுத்தங்களால்தான் பிரதமர் வேட்பாளராக பாஜகவால் மோடி முன்னிறுத்தப்பட்டார்" என்றார் அகிலேஷ் யாதவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x