Published : 30 Apr 2014 11:00 AM
Last Updated : 30 Apr 2014 11:00 AM

பயங்கரவாதத்தை ஒடுக்க பாஜக ஒன்றும் செய்யவில்லை: ராகுல் காந்தி தாக்கு

பயங்கரவாதத்தை ஒடுக்க பாஜக ஒன்றும் செய்து விடவில்லை. காந்தஹார் விமான கடத்தல் சம்பவத்தை கையாள 3 தீவிரவாதிகளை விடுதலை செய்தது வாஜ்பாய் அரசு என்று குற்றம் சாட்டினார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

காஷிபூரில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பயங்கரவாதத்தை ஒடுக்கும் விஷயத்தில் காங்கிரஸ் அரசு மெத்தனப் போக்கை கையாள்வதாக எதிர்க் கட்சி கூறுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி எப்போதுமே பயங்கரவாதிகளிடம் அடங்கிப் போனதில்லை. பிரதமர் வாஜ்பாய் உள்பட பாஜக அரசின் அப்போதைய உயர் தலைவர்கள் அனைவருமே காந்தஹார் விமானக் கடத்தல் காரர்களின் நிபந்தனை களுக்கு அடிபணிந்தார்கள்.

தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுடன் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆப்கானிஸ் தானுக்குச் சென்றார்.

அதே தீவிரவாதிகள்தான் 2001-ல் நாடாளுமன்றம் மீது நடந்த தாக்குதல் உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களுக்கு காரணமானவர்கள். வாஜ்பாய் ஆட்சியில் 1998-க்கும் 2004க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் ராணுவ வீரர்கள் உள்பட 22000 பேர் கொல்லப்பட்டனர்.

மாறாக, காங்கிரஸ் தலை மையில் இரண்டாவது முறை அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் 800 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாத தாக்குதல் குறைந்ததற்கு காங்கிரஸ் கையாளும் சகோதரத் துவமும் நல்லிணக்க அரசியலுமே காரணம் என்றார் ராகுல் காந்தி.

1999 டிசம்பர் மாதம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாருக்கு கடத்தப்பட்டது. 8 நாளாக பிணையில் வைக்கப்பட்டிருந்த விமான பயணிகள் 3 தீவிரவாதிகளை விடுவித்த பிறகே ஒப்படைக்கப்பட்டனர். விடுதலையான தீவிரவாதிகளில் மசூத் அசார் ஒருவர். இவர்தான், பின்னர், ஜெய்ஷ் இ முகம்மது என்கிற பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தானில் தோற்றுவித்தவர். இந்தியாவில் இந்த அமைப்பு பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளது. பிரச்சாரத்தில் ராகுல்காந்தி குறிப்பிட்டுப் பேசியது காந்தஹார் விமான கடத்தல் சம்பவத்தைத்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x