Published : 29 Apr 2014 09:32 AM
Last Updated : 29 Apr 2014 09:32 AM
நாடு முழுவதும் 7-வது கட்டமாக 89 மக்களவைத் தொகுதிகளுக்கும் தெலங்கானா சட்டமன்றத்துக்கும் (நாளை) புதன்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் கசப்பின் உச்சத்தை எட்டியது.
இந்த வார்த்தைப் போரில் மையத்தில் நரேந்திர மோடி நிற்க, அவரைச் சுற்றி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டன.
7-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (செவ்வாய்கிழமை) மாலை முடிவுக்கு வந்தது. தான் சற்றும் சளைத்தவர் இல்லை என்பது போல், தன் மீதான விமர்சனங்களுக்கு மோடியும் பிரச்சாரங்களில் பதில் அளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி: "பொழுதுபோக்குக்காக நீங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம். ராகுல் வீடியோக்களை பாருங்கள். நாள் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம். சில நேரங்களில் நீங்கள் மனஇறுக்கத்தில் இருந்தால் உடனடியாக ராகுலின் பேச்சுகளை கேளுங்கள். அவரது கணித அறிவின்படி குஜராத்தில் 27,000 கோடி பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையே 6 கோடிதான். இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 125 கோடி. அதையும் தாண்டி குஜராத்தில் 27,000 கோடி பணியிடங்கள் காலியாக இருப்பதாக ராகுல் கூறுகிறார். எந்த மாதிரியான நபரை தேர்தல் பிரச்சாரத்துக்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளது என்பது எனக்குப் புரியவில்லை" என பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கான்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி: "குஜராத்தில் ஒரே ஒரு மாதிரி வளர்ச்சித் திட்டம் தான் நடைமுறையில் இருக்கிறது. அது பணக்காரர்களுக்கான வளர்ச்சித் திட்டம். மோடி அரசிடமிருந்து பெற்ற சலுகையின் காரணமாக தொழிலதிபர் அதானி, ரூ. 35 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளார். நாட்டில் ஒரு சிலர் மட்டுமே வளம் பெற வேண்டும் என்று மோடி கருதுகிறார் போலும். நாங்கள் (காங்கிரஸ்) அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியைத்தான் விரும்புகிறோம்" என பேசினார்.
ஆனால், விடாமல் வார்த்தைப் போரை தொடர்ந்த பாஜக, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான நிலமோசடி புகாரை கையில் எடுத்தது.
"எங்களுக்கு சவால் விடுவதை நிறுத்திக் கொண்டு ராபர்ட் வதேரா மீதான புகார்கள் தொடர்பான எங்கள் கேள்விகளுக்கு காங்கிரஸ் பதில் அளிக்க வேண்டும்" என பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இது தவிர சமூக வலைத்தளங்களில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரை விமர்சித்து நரேந்திர மோடி பதிவுகள் இட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT