Published : 01 May 2014 12:44 PM
Last Updated : 01 May 2014 12:44 PM

தெலங்கானாவில் விறுவிறு வாக்குப்பதிவு

தெலங்கானாவில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கடைசி தேர்தல் ஏப்ரல் 30-ம் தேதியும் (தெலங்கானா பகுதி), மே 7-ம் தேதியும் (சீமாந்திரா பகுதி) இருகட்டங்களாக நடைபெற்று வருகிறது.

தெலங்கானா மாநிலம் அதிகாரப் பூர்வமாக வரும் ஜூன் 2-ம் தேதி உருவாக்கப்படவுள்ளது. இதனால், தெலங்கானாவில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் இளைஞர்கள், பெண்கள், முக்கிய பிரமுகர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மொத்தம் 17 நாடாளுமன்றம், 119 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியவுடன், ஹைதராபாத், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், மேதக், கம்மம், நிஜாமாபாத் உள்ளிட்ட சில இடங்களில் வாக்கு இயந்திரங்கள் இயங்காததால் வாக்காளர்கள் தேர்தல் அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். பின்னர் இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. சில இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், தேர்தல் ஆணையத்தின் வாக்குச்சாவடி சீட்டு இல்லாததால், பலரை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதே காரணத்திற்காக நடிகர் பிரம்மானந்தம், ஐ.ஏ.எஸ் அதிகாரி ராதா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிலரும் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.

மேதக் மாவட்டம் கஜ்வாலில், காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டி, வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் ஆகியவை விநியோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.மேதக் தொகுதியில் உள்ள ஒரு தேர்தல் மைய அதிகாரி, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் எனும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் நடிகை விஜயசாந்திக்கும், தேர்தல் அதிகாரி மதுசூதனனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் கே. சந்திரசேகர் ராவ், தனது மனைவியுடன் ஹெலிகாப்டரில் வந்து வாக்களித்தார்.

வாக்களித்த பிரமுகர்கள்

தெலங்கானாவில் வாக்குப்பதிவு தொடங்கியவுடன் சினிமா, அரசியல் பிரமுகர்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தனர்.

மாநில ஆளுநர் இ.வி.எஸ். நரசிம்மன் அவரின் துணைவியார் விமலா நரசிம்மன் ஆகியோர் ஹைதராபாத் எம்.எஸ். மக்தா சாவடியில் வாக்களித்தார். பர்கத் புரா மையத்தில் பா.ஜ தெலங்கானா தலைவர் கிஷன் ரெட்டி வாக்களித்தார். மாநில டி.ஜி.பி. பிரசாத் ராவ் மசாப் டேங் பகுதியில் வாக்களித்தார்.

ஜன சேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யான் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வாக்களித்தார். அதே பகுதியில், திரைப்பட நட்சத்திரங்கள் என்.டி.ஆர்., ராஜ சேகர், ஜீவிதா, நாகர்ஜுன், அமலா, சுமந்த், ஸ்ரீகாந்த், தயாரிப்பாளர்கள் ராமா நாயுடு, சுரேஷ் பாபு, இயக்குநர்கள் ராஜ மவுலி, தேஜா உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x