Published : 27 Apr 2014 08:03 PM
Last Updated : 27 Apr 2014 08:03 PM
மக்களவைத் தேர்தலில் வெற்றி பாஜக தலைமையிலான அரசு அமைந்தால், மத பேதமின்றி அனைவரின் பாதுகாப்புக்கும் உறுதிபூண்டுள்ளதாக, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி தெரிவித்தார்.
மதவாதம், அதிகாரம் மற்றும் பணம் ஆகியவற்றின் ஆபத்தான கலவையே பாஜகவின் கொள்கைகள் என்றும், இந்தியாவை சொர்க்கமாக்கப் போவதாக மோடி கூறிவருவதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
என்னிடம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இல்லை...
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மோடி அளித்த பேட்டியில், சோனியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தவர், "மக்களவைத் தேர்தலில் 100 இடங்களிலாவது கைப்பற்ற மாட்டோமா என்ற விரக்தியில் அவர் இப்படி பேசி வருகிறார்.
இந்தியாவை சொர்க்கமாக்குவேன் என்றும், எல்லா பிரச்சினைகளுக்கும் என்னிடம் தீர்வுகள் இருக்கின்றன என்றும் நான் ஒருபோதும் சொன்னதில்லை. மக்களுடம் என்னிடம் இருந்து இவற்றை எதிர்பார்க்கவில்லை என்றே நம்புகிறேன். ஆனால், மக்கள் விரும்புவதுபோல் உறுதியானதும் நீடித்ததும், உணர்வுப்பூர்வமான அரசைத் தரமுடியும் என்று நம்புகிறேன்."
சமீபகாலமாக பிரியங்கா காந்தி கடுமையாக சாடி வருவது குறித்து கேட்டதற்கு, "தன் அம்மாவுக்காக ஒரு மகளும், தன் சகோதரனுக்காக ஒரு சகோதரியும் பேசுவது என்பது இயல்பானது. இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை" என்றார்.
மதசார்பின்மை எது..?
தேர்தலுக்குப் பிறகு ஆதரவு தேவைப்படலாம் என்றச் சூழலிலும், மம்தா பானர்ஜி, ஜெயலலிதா மற்றும் மாயாவதி முதலான தலைவர்களுடன் பிரச்சாரக் களத்தில் மோதல் போக்கு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மோடி, "நாங்கள் 25-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து வலுவான நிலையில் இருக்கிறோம். மத்தியில் ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி பெறும் என நம்புகிறேன். அதேவேளையில், நாட்டை வழிநடத்த அனைவரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்" என்றார்.
இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதியை கடுமையாக விமர்சித்தபோது, "இது கடைசி நேர முயற்சி. முழுக்க முழுக்க வாக்கு வங்கி அரசியல் இது. மதசார்பின்மை என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டது என்றே சொல்வேன்" என்றார் மோடி.
நாட்டில் தனக்கு ஆதரவான அலையும், காங்கிரஸ் எதிர்ப்பு அலையும் ஒருசேர காணப்படுவதாக குறிப்பிட்ட மோடி, குஜராத் கலவரம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கவில்லை.
அதேவேளையில், மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, தன் மீது ஊழல், நிர்வாகத் திறமையின்மை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஏதுமில்லாத காரணத்தினால்தான் எதிரணியினர் குஜராத் கலவர விவாகரத்தைக் கையிலெடுத்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
அனைவருக்கும் பாதுகாப்பு...
பாஜக ஆட்சி அமைத்தால், நாட்டில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்ற கேள்வியை எதிர்கொண்டவர், "இஸ்லாமியர்களை வாக்கு வங்கிகளாகக் கருதுபவர்கள்தான், அவர்களது முன்னேற்றத்தைப் பற்றி கவலைப்படாமல், பாதுகாப்பு குறித்து தேவையில்லாமல் பேசுகிறார்கள். அதுபோல் இனி அரசியல் செய்ய முடியாது.
இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என 125 கோடி இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், முன்னேற்றத்துக்கு வழிவகுக்கவும் நாங்கள் உறுதிபூண்டிருக்கிறோம். 'அனைவரின் ஆதரவுடன், அனைவரின் முன்னேற்றம்' என்பதுதான் எங்களது தாரக மந்திரம்" என்று கூறினார்.
ஊழல் பிரச்சினையை எதிர்கொள்வது குறித்து அவர் கூறும்போது, "தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நாட்டில் ஊழலையும் கிரிமினல் நடவடிக்கைகளையும் ஒழிப்பதற்காக உரிய திட்டங்களை வகுத்திருக்கிறேன். முதலில், குற்ற வழக்குகள் உள்ள எம்.பி.க்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வகை செய்வேன். குற்றம் செய்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவது உறுதி" என்றார்.
தேசப்பற்று...
கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மோடி, "நான் முதலில் இந்தியன். அப்படித்தான் என்னைப் பார்க்க விரும்புகிறேன். அதன்பின், நம்பிக்கையின் அடிப்படையில் இந்து. இதில் பெருமிதம் கொள்கிறேன். என் தேசத்தை நான் நேசிக்கிறேன். எனவே, நீங்கள் என்னை தேசப்பற்று மிக்கவன் என அழைக்கலாம்" என்றார் மோடி.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, மோடி தன்னை 'இந்து தேசியவாதி' என்று அழைத்துக்கொண்டது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT