Published : 30 Apr 2014 11:31 AM
Last Updated : 30 Apr 2014 11:31 AM
வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்கு சாவடிக்கு சென்ற மத்திய அமைச் சரும் நடிகருமான சிரஞ்சீவியை ஒரு வாக்காளர் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்டதால், அவர் வரிசையில் நின்று குடும்பத்துடன் வாக்களித்தார்.
ஆந்திர மாநிலம் தெலங்கானா பகுதியில் புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிரஞ்சீவி, ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதிக்கு தனது மனைவி சுரேகா, மகன் ராம்சரண் தேஜா ஆகியோருடன் வாக்களிக்கச் சென்றார். அப்போது பொதுமக்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருந்தனர்.
சிறிது நேரம் வரிசையில் காத்திருந்த சிரஞ்சீவி, பின்னர் தனது குடும்பத்தாருடன் வாக்கு சாவடிக்கு சென்றார். அப்போது வரிசையில் நின்றுகொண்டிருந்த ராஜா கார்த்திக் எனும் இளைஞர், சிரஞ்சீவியைப் பார்த்து, 'சார் நான் லண்டனில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். நானும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்களிக்க வரிசையில் காத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் வரிசையில் வராமல் உள்ளே செல்கிறீர்களே' எனக் கேட்டார்.
இதற்கு சிரஞ்சீவி, "நான் வாக்களிக்க செல்லவில்லை. எனது குடும்பத்தாரின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என பார்க்கச் சென்றேன்’’ என பதிலளித்து வரிசையில் நின்று வாக்களித்தார்.
பிறகு, இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் ஜனநாயகத்தை மதிப்பவன். வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உள்ளனவா என்பதை காணவே உள்ளே சென்றேன் என பதிலளித்தார். மத்திய அமைச்சர் சிரஞ்சீவியை தட்டிக் கேட்ட இளைஞர் ராஜா கார்த்திக்கை அங்கிருந்த சக வாக்காளர்கள் கைதட்டி வெகுவாக பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT