Published : 01 May 2014 11:22 AM
Last Updated : 01 May 2014 11:22 AM
குஜராத்தின் அகமதாபாத் மேற்கு மக்களவைத் தொகுதியில், ஷாபூர் பகுதியில் உள்ள நகராட்சிப் பள்ளியில், பாஜக மூத்த தலைவர் அத்வானி தனது மகன் ஜெயந்த், மகள் பிரதிபா ஆகியோருடன் வந்து நேற்று வாக்களித்தார்.
இத்தொகுதியில் பாஜக எம்.பி. கிரித் சோலங்கி மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் ஈஸ்வர் சாவ்தாவும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஜே.ஜே.மேவதாவும் போட்டியிடுகின்றனர். அத்வானி போட்டியிடும் காந்தி நகர் தொகுதியிலும் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
வாக்களித்த பின் அத்வானி நிருபர்களிடம் கூறுகையில், “1947 முதல் எல்லா தேர்தல்களையும் பார்த்துள்ளேன். நாடு குடியரசான பிறகு 1952-ல் நடந்த முதல் தேர்தல் தொடங்கி, தற்போதைய தேர்தல் வரை பார்க்கிறேன். நாட்டில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், தற்போதைய மக்களவைத் தேர்தலே மிகவும் குறிப்பிடத்தகுந்த தேர்தல்.
தகுதியுள்ள அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டுகிறேன். இந்திய நாடாளுமன்றம் உலகின் மிகப் பெரியதாகும். எனவே இன்று வாக்களிக்கும் குடிமக்கள் தங்களை அதிர்ஷ்டசாலிகளாக கருதவேண்டும். மக்களவைத் தேர்தல் நடைபெறும்போதெல்லாம் அனைத்து மக்களும் இதில் உற்சாகத்துடன் பங்கேற்கின்றனர். இதுவே நமக்குப் பெருமை” என்றார்.
நரேந்திர மோடி பிரதமராகும் வாய்ப்பு குறித்த கேள்விகளை அத்வானி தவிர்த்தார். “அரசியல் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கப் போவதில்லை” என்ற அத்வானி, “தேர்தல் முடிவுகள் யாருக்கும் வியப்பளிக்கும் வகையில் இருக்காது. ஏதோ ஒன்று நடக்க வேண்டும். அது நல்லதாகவே நடக்கட்டும். வாக்குப்பதிவு சதவீதம் இதுவரை அதிகமாகவே உள்ளது. குஜராத்திலும் அவ்வாறே இருக்கும்” என்றார்.
கட்டாய வாக்குப் பதிவை ஆதரித்து அத்வானி கூறுகையில், “பல்வேறு நாடுகளில் கட்டாய வாக்குப்பதிவு நடைமுறையில் உள்ளது. நம் நாட்டிலும் அதை நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும். வாக்களிக்கத் தவறுவோருக்கு அபராதம் விதிக்க கூடாது என்பது என் கருத்து. வாக்களிக்கத் தவறுவோரை தண்டிக்க விரும்பினால், அடுத்து வரும் தேர்தலில் அவரை வாக்களிக்க அனுமதிக்க கூடாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT