Published : 30 Apr 2014 09:35 AM
Last Updated : 30 Apr 2014 09:35 AM

தாய் - மகன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது: நரேந்திர மோடி

மத்தியில் தாய் - மகன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது என குஜராத் மாநிலம் காந்திநகரில் வாக்களித்த பின்னர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 7-வது கட்டமாக 89 மக்களவைத் தொகுதிகளிலும், தெலங்கானா சட்டமன்றத் தொகுதியிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் இன்று காலை 9 மணியளவில் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்களித்தது குறித்து தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில், "அத்வானியின் தொகுதியில் வாக்களிப்பதை மிகப்பெரிய ஆசியாக கருதுகிறேன்" என பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மோடி பேசியதாவது: "மத்தியில் பாஜக நிலையான ஆட்சி அமைக்கும். இந்த தேர்தல் நாட்டின் விதியை மாற்றி அமைக்கும். தாய் - மகன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. தேச நலனுக்கு அச்சுறுத்தலாக உள்ள அனைத்து கேடுகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அகற்றும். நான் தேசத்துக்கு உள்ள அச்சுறுத்தலை போக்க நினைக்கிறேன் ஆனால் காங்கிரஸ் கட்சி என்னை அகற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கிறது. குஜராத் மக்களுக்கு நன்மை செய்துள்ளது போல் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காகவே தேர்தலில் வாக்களித்துள்ளேன். இதுவரை எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. இனியும் என்னை ஆதரிப்பீர்கள் என நம்புகிறேன். தேர்தலில் இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்க வேண்டும்" என்றார்.

காங்கிரஸ் புகார்:

நரேந்திர மோடி காந்திநகரில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவரது கையில் தாமரைச் சின்னத்தை வைத்துக்கொண்டு பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x