Published : 24 Mar 2014 06:47 PM
Last Updated : 24 Mar 2014 06:47 PM
# தமிழகத்தின் பிற பகுதிகளைவிட, கரூரில் மின்வெட்டு மிக அதிகம் என்கின்றனர் மக்கள். இதனால், விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் சிறு கடைகள் தொடங்கி சிறு குறு கொசுவலை தொழிற்சாலைகள், ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், நூற்பாலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, சென்னையைப் போல தடையில்லா மின்சாரம் அல்லது மின்சார உற்பத்தி ஜெனரேட்டருக்கான டீசல் மானிய விலையில் தர வேண்டும் என்கின்றனர் மக்கள்.
# கரூரில் காவிரி ஆறு ஓடினாலும் குடிநீருக்குக் கடுமையான பஞ்சம் நிலவுகிறது. கரூர் நகராட்சியுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இனாம் கரூர், தாந்தோணி ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டன. இதனால், கரூரின் மக்கள்தொகை 2.14 லட்சமானது. ஆனால், புதிய குடிநீர்த் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இதனால், இனாம் கரூர், தாந்தோணி பகுதிகளில் சுமார் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் சுமார் 64 கோடி ரூபாயில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்பு, தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் புதிய காவிரி குடிநீர்த் திட்டம் 68.40 கோடி ரூபாய் மதிப்பில் அறிவிக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. விரைவில் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
# கரூரில் இருந்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சிக்கு வேலை நிமித்தமாகத் தினசரி செல்கின்றனர். அவர்கள் கரூர் - பழனி ரயில் வழித்தடத்தை பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி வழியாக அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிவருகின்றனர்.
# காவிரி ஆற்றில் மாயனூர், லாலாப்பேட்டை, திருக்காம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாகக் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மணல் அள்ளப்படுகிறது. இதனால், ஆற்றில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் அந்தப் பள்ளங்களில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தவிர, தாறுமாறாக ஓடும் மணல் லாரிகளால் ஏற்படும் விபத்துகளும் அதிகம். தொடர்ச்சியாக மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள் மக்கள்.
# மணப்பாறையில் நீண்ட காலமாக இழுபறியில் உள்ள ரயில்வே மேம்பாலப் பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.
# நூற்பாலைகள் நிறைந்த வேடசந்தூர் பகுதியில் சாலை, சாக்கடை வசதிகள், தெருவிளக்குகள் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.
# கரூர் - சேலம் அகல ரயில் பாதை செயல்பாடு மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அந்த வழித்தடத்தில் மேலும் புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என்கிறார்கள் மக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT