Published : 09 Mar 2014 05:39 PM
Last Updated : 09 Mar 2014 05:39 PM
# சின்ன சேலம் - கள்ளக்குறிச்சி ரயில் பாதைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. தொகுதிக்குள் சுமார் எட்டு ரயில் நிலையங்களை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், நிலத்தைக் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் திட்டம் நிறுத்தப்பட்டது.
# தேர்தல் வாக்குறுதியில் கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டம் ஆக்குவேன் என்றார் தற்போதைய எம்.பி. ஆதிசங்கர். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது அதற்கான வாய்ப்புகள் இருந்தும் அவர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை; பதவிக் காலம் நிறைவடையும் நிலையில் அவர் மாநில ஆட்சி மாற்றத்தைச் சாக்கிட்டுத் தப்பித்துக்கொள்கிறார் என்கின்றனர் மக்கள்.
# கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே நான்கு முனை சந்திப்பு உள்ளது. இதனால், கடும் போக்குவத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை, சேலம் செல்லும் பேருந்துகள், கரும்பு ஏற்றிய லாரிகள், டிராக்டர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றன. இங்கு ஒரு மேம்பாலம் அல்லது நகரைச் சுற்றிய வெளிவட்டச் சாலை அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கை.
# கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தைப் புதிய இடத்தில் அனைத்து வசதிகளுடன் விசாலமானதாக அமைக்க வேண்டும். ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், முக்கிய அரசு அலுவலகங்கள், எஸ்.பி. அலுவலகம் அனைத்தும் ஒருங்கிணைந்த கட்டிடத்தில் வர வேண்டும் என்கிறார்கள் மக்கள்.
# மழைக் காலங்களில் மணலூர்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றின் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் ஓடுவதால், மக்கள் பல கிலோ மீட்டர் சுற்றிச் செல்கிறார்கள். அங்கு மேம்பாலம் தேவை.
# கல்வராயன் மலையில் கடுக்காய் தொழிற்சாலை அமைப்பதாகக் கடந்த கால எம்.பி-க்கள் வாக்குறுதி கொடுத்தார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் ஒரு தொழிற்சாலை ஒன்று தொடங்கப்பட்டது. சில வாரங்கள் மட்டுமே இயங்கிய தொழிற்சாலையை மீண்டும் மூடிவிட்டார்கள். இதற்குக் காரணமாக, மின் பற்றாக்குறை, ஆட்கள் பற்றாக்குறையைச் சொல்கிறார்கள்.
# கல்வராயன் மலையில் பெரும்பாலான கிராமங்களில் மின் வசதியே கிடையாது. இதுவரை சாலைகளே போடப்படாத கிராமங்களும் இருக்கின்றன. மலை கிராம மக்களின் முக்கியக் கோரிக்கை பள்ளிகள் வேண்டும் என்பதே. பள்ளிகளில் படிப்பதற்காக மாணவர்கள் பல கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருக்கிறது. மேற்கண்ட கிராமங்களுக்கான பேருந்து வசதிகளும் குறைவே.
# சேலம் மாவட்ட எல்லையான வி.கூட்டுரோடு மாட்டுப் பண்ணை பகுதியில் கால்நடைத் துறைக்குச் சொந்தமாக ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது. அங்கு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் தொழிற்பேட்டை அமைக்க மக்கள் போராடிவருகின்றனர். ஆனால், நிறைவேற்றப்படவில்லை.
# தொழிற்சாலைகளும் தொழில் வளர்ச்சியும் இல்லை. ‘சேகோ’ உற்பத்தி, தொகுதியின் பிரதானத் தொழிலாக இருந்தது. மரவள்ளிக் கிழங்கு ‘சேகோ’விலிருந்து தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வடமாநிலங்களுக்கு ஏற்றுமதியாகிக்கொண்டிருந்தன. அந்தத் தொழிலும் இப்போது நசிந்துவிட்டது.
# தொகுதி முழுவதுமே குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, ஆத்தூரில் குடிநீருக்காக மக்கள் அடித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வாரத்துக்கு இரண்டு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
# கழிவுநீர் மற்றும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. பாதாள சாக்கடைத் திட்டமும் இங்கு இல்லாததால் பொது சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, கெங்கவல்லியிலிருந்து திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் வரை 80 கிலோ மீட்டர் தொலைவிலான சாலை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதனைச் சீரமைக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT