Last Updated : 01 Jun, 2023 06:17 AM

 

Published : 01 Jun 2023 06:17 AM
Last Updated : 01 Jun 2023 06:17 AM

மாணவர்களின் எழுத்தாற்றலை அஞ்சல் வழியே மீட்டெடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்

தங்களது படைப்புகள் வெளியான ‘நாற்றங்கால்' கையெழுத்து இதழுடன் மாணவர்கள். உடன், ஆசிரியர் ம.இளவரசு.

கோவை: கரோனா கால பொதுமுடக்கத்தால், பள்ளி மாணவர்களிடம் கற்றல் இடைவெளி ஏற்பட்டதோடு, அவர்களின் பழக்க வழக்கங்களிலும் மாற்றம் ஏற்பட்டது.

வீட்டிலேயே இருந்ததால், பெரும்பாலான மாணவர்கள் செல்போன்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினர்.இதனால், அவர்களின் கவனம் திசைதிரும்பியதோடு, எழுதும் பழக்கம் என்பது முற்றாக இல்லாமல்போனது. பல மாணவர்கள் மொழியின் அடிப்படையையே மறந்துவிட்டனர்.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபிறகு, மாணவர்களை பழைய நிலைக்கு கொண்டுவர ஆசிரியர்கள் பெரும்பாடு பட்டனர். இந்நிலையில், எழுத்தின்மீதும், நூல் வாசிப்பின் மீதும் மாணவர்களின் ஆர்வத்தை திசை திருப்ப, அஞ்சல் அட்டையை கருவியாக்கி, வெற்றி கண்டுள்ளார் கோவை கிணத்துக்கடவை அடுத்துள்ள அரசம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ம.இளவரசு. எழுத்தாற்றல் மட்டுமல்லாமல், மாணவர்களின் கட்டுரை, கவிதை, ஓவியம், கள நேர்காணல் உள்ளிட்ட படைப்புகளைத் தொகுத்து ‘நாற்றங்கால்’ எனும் கையெழுத்து இதழையும் வெளியிட்டுள்ளார்.

கடிதத்துக்கு கிடைத்த பரிசு: இந்த முயற்சி குறித்து ஆசிரியர் ம.இளவரசு கூறியதாவது: முதலில் அஞ்சல் சேவை மூலம் கடிதம் அனுப்புவது குறித்து பேசியபோது, ‘யாருக்கு எழுதுவது என்றே தெரியவில்லை’ என மாணவர்கள் தெரிவித்தனர். இதுவரை அப்படி ஓர் அனுபவமே இல்லாததால், நண்பர்கள், உறவினர்களுக்கு கடிதம் எழுத மாணவர்கள் தயங்கினர்.

எனவே, நீங்கள் படித்த நூல்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதுங்கள் என்றேன். மாணவர்கள் ஆர்வமுடன் சம்மதித்தனர். அப்படியே அவர்களை அஞ்சல் நிலையம் அழைத்துச் சென்று, அவர்களையே அஞ்சல் அட்டைகளை வாங்கச் செய்தேன். தேர்வுக்காக கடிதம் எழுதிய மாணவர்கள் முதன்முறையாக உண்மையாகக் கடிதம் எழுதினர். சில எழுத்தாளர்களின் முகவரி பெற்று, அவர்களுக்கு மாணவர்கள் கடிதம் எழுதியதன் விளைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஒரு கடிதத்தைப் பெற்றுக்கொண்ட சிறார் எழுத்தாளர் விழியன், கடிதம் எழுதிய மாணவிக்கு 10 புத்தகங்களை அன்புப் பரிசாக அனுப்பி வைத்தார். இது, அந்த மாணவி தொடர்ந்து நூல்களை படிக்கும் பழக்கத்துக்கு ஊக்குவிப்பாக அமைந்தது. இதேபோல, எழுத்தாளர் பாமரன், தனக்கு கடிதம் எழுதிய மாணவிக்கு, தானே கையெழுத்திட்டு ஒரு நூலைப் பரிசாக அனுப்பினார்.

பிற மாணவர்கள் படிக்க மேலும் இரு நூல்களையும் வழங்கினார். கவிஞர் அம்சப்பிரியாவும் புத்தகங்களை அனுப்பினார். எழுத்தாளர்கள் ஜெ.தீபலட்சுமி, இனியன், நாணற்காடன் ஆகியோரின் பதில் மடல்களும், அறிவுரைகளும் மாணவர்களை ஊக்கப்படுத்தின. இப்போது மற்ற மாணவர்களும் கடிதம் எழுதுவதிலும், நூல்களைப் படிப்பதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

கடிதம் எழுதிய அனுபவம் குறித்து மாணவிகள் பிரித்திகா ஸ்ரீ, ஸ்ரீபா, காவியா, ரம்யா, தர்ஷினி, நந்தினி ஆகியோர் கூறும்போது, “முகம் தெரியாதவர்களுக்கு கடிதம் எழுதி, பதில் கிடைத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பரிசாக பெற்ற புத்தகங்களை படித்தபிறகு, மேலும் நிறைய படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. புத்தக வாசிப்பு மூலம் தற்போது பலதரப்பட்ட விஷயங்களை தெரிந்துகொள்கிறோம்”என்றனர்.

உணர்வுகளின் பிரதிபலிப்பு: பள்ளியின் தலைமை ஆசிரியை ப.ரேவதி கூறும்போது, “இன்றைய சூழலில் சமூக வலைதளங்கள் மூலம் நொடிகளில் தகவல் பரிமாற்றம் நிகழ்வது ஒரு வரம்தான். ஆனால், அஞ்சல் வழி தகவல் பரிமாற்றத்தில் இருந்த காத்திருப்பும், அவை கடத்திய உணர்வுகளையும் இன்றைய மாணவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தச் சூழலில், பாட புத்தகங்களை படிக்க வைப்பதை மட்டுமே எண்ணாமல், பன்முகத் திறமைகளை வெளிக்கொண்டுவர ஆசிரியர் இளவரசு மேற்கொள்ளும் முயற்சி பாராட்டுக்குரியது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x