Published : 31 May 2023 03:28 PM
Last Updated : 31 May 2023 03:28 PM
சென்னை: தமிழக பல்கலைக்கழகங்களில் மொழிப் பாடத்தில் ஒரே பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி புதன்கிழமை மாநில கல்விக் கொள்கை தொடர்பாக 19 பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியது: "தமிழக பல்கலைக்கழகங்களில் மொழிப் பாடத்தில் ஒரே பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், முதல் இரண்டு பருவத் தேர்வுகளில், தமிழ் இலக்கிய வரலாறு ஆங்கிலேயர் வருகைக்கு முன்பாக இருந்தவை முதல் பகுதியாகவும், ஆங்கிலேயர் வருகைக்கு பின்னர் ஏற்பட்ட தமிழ் இலக்கியங்கள் இரண்டாவது பகுதியாகவும், முதல் மற்றும் இரண்டாம் பருவத் தேர்வுகளில் பாடங்களாக நடத்தப்படவுள்ளது.
மூன்றாவது பருவத் தேர்வில் தமிழர்கள் வரலாறும் பண்பாடும் என்ற பாடம் முதல் பகுதியாகவும், நான்காவது பருவத் தேர்வில் தமிழும் அறிவியல் வளர்ச்சியும் என்ற இரண்டாவது பகுதியும் நடத்தப்படவுள்ளது. தமிழ் மொழிப்பாடத்தில் இந்த நான்கு பாடங்களும் நடத்தப்பட இருக்கிறது. அதேபோல், இந்த நான்கு பருவத் தேர்வுகளிலும் ஆங்கில மொழிப்பாடமும் கட்டாயமாக படிக்க வேண்டும். மொழிபெயர்ப்பு மற்றும் இலக்கணமும் இந்தப் பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சார்ந்த பாடத்திட்டங்களை உருவாக்க 4 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், ஆங்கிலப் பாடத்திட்டங்களை உருவாக்குவதற்காக ஒரு குழு உருவாக்கப்பட இருக்கிறது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின்படி, இந்த கல்வி ஆண்டு முதலே பாடத்திட்டங்கள் நடத்தப்படும்.
அதேபோல் மற்ற பாடங்களுக்கான உயர் கல்வித் துறையின் பாடத் திட்டங்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. அனைத்து துணை வேந்தர்களும் அதனை பெற்றுக் கொண்டுள்ளனர். அவர்களும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். அந்தப் பாடத்திட்டத்தை வைத்துக்கொண்டு, அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் இருந்தால் செய்து கொள்ளலாம்.ஆனால், இந்தப் பாடத்திட்டத்தைத்தான் 75 சதவீதம் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும். தேவையிருப்பின், 25 சதவீதத்தில் மாற்றம் செய்துகொள்ளலாம். உயர் கல்வித் துறையின் பாடத்திட்டத்தின்படி தமிழ், ஆங்கிலத்தில் நூறு சதவீதம், மற்ற பாடங்களில் 75 சதவீதமும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக கடந்த ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகளில் மட்டும் 6,986 பேராசிரியர்களுக்கு எப்படி நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கிட்டத்தட்ட 3 லட்சத்து 5 ஆயிரத்து 784 மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். அதேபோல் அரசு மற்றும் கலைக் கல்லூரிகளில் 22 பாடப் பிரிவுகளில் 7,835 பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் 8 லட்சத்து 55 ஆயிரத்து 785 மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். இந்த ஆண்டு இதை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்று துணைவேந்தர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT