Published : 30 May 2023 04:39 AM
Last Updated : 30 May 2023 04:39 AM

தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. புதிய துணைவேந்தராக கே.நாராயணசாமி நியமனம்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை. துணைவேந்தராக டாக்டர் கே.நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன ஆணையை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வழங்கினார். உடன் ஆளுநரின் முதன்மைச் செயலர் ஆனந்தராவ் வி.பாட்டீல்.

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மருத்துவர் கே.நாராயணசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான ஆணையை அவரிடம் வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் 10-வது துணைவேந்தராக மருத்துவர் சுதாசேஷய்யன் 2018-ம் ஆண்டுடிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்று கொண்டார். அவரது பதவிக்காலம் 2021-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அவரது பதவி காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்து ஆளுநர் உத்தரவிட்டார். தொடர்ந்து 4 ஆண்டுகள் துணைவேந்தராக இருந்த சுதா சேஷய்யன் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி ஓய்வு பெற்றார்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர்ஆர்.என்.ரவி, கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் கே.நாராயணசாமியை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 11-வது துணைவேந்தராக நியமித்து, அதற்கான ஆணையை அவரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மருத்துவர் கே.நாராயணசாமி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் துறை தலைவராகவும், இயக்குநராகவும், தேசிய கல்லீரல் அழற்சி ஒழிப்பு திட்டத்தில் உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். கல்லீரல் தொடர்பான பல்வேறுஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளார். அதே மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பல ஆண்டுகளாகவும், டீனாக சில காலமும் பணியாற்றியுள்ளார்.

கரோனா காலத்தில் சிறப்பாகபணியாற்றியதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்தது. தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் சிறந்த மருத்துவருக்கான விருது, இந்திய மருத்துவ சங்கத்தின் சிறந்த நிர்வாகத் திறன் மற்றும் சிறந்த மருத்துவருக்கான விருது, தமிழக அறிவியலறிஞர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை நாராயணசாமி பெற்றுள்ளார்.

33 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி அனைவரது நன்மதிப்பை பெற்றஅவர், 13 ஆண்டுகள் நிர்வாக திறன் கொண்டவர். வரும் ஜூன்மாதத்துடன் ஓய்வு பெற இருந்தநிலையில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் அவர் மூன்று ஆண்டுகள் இருப்பார். ஓரிரு நாட்களில் துணைவேந்தராக நாராயணசாமி பொறுப்பேற்கவுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x