Published : 20 May 2023 05:41 AM
Last Updated : 20 May 2023 05:41 AM
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி தொடங்கும் என்றுஅமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
முன்கூட்டியே தொடக்கம்: பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்கள் நலன்கருதி அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கலந்தாய்வு ஒருமாதம் முன்னதாகவே ஜூலை 2-ல் தொடங்கி செப்.3-ம் தேதிவரை இணையவழியில் நடைபெறும்.
சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 2 முதல் 5-ம் தேதி வரையும், பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஆக.24-ம் தேதி வரையும் நடத்தப்படும். துணைக் கலந்தாய்வு ஆக.28-ல் தொடங்கி 30-ம் தேதி நிறைவு பெறும். எஸ்சி காலியிடங்களுக்கான கலந்தாய்வு செப்.1, 2, 3-ம் தேதிகளில் நடை பெறும்.
இதற்கேற்ப விண்ணப்பித்த மாணவர்களின் ரேண்டம் எண் ஜூன் 6-ம் தேதி வெளியாகும். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஜூன் 5முதல் 20-ம் தேதி வரை நடத்தப்படும். மேலும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 26-ல் வெளியிடப்படும். அதில் ஏதும் தவறுகள் இருந்தால், அதன் புகார்களை ஜூன் 26 முதல் 30-ம் தேதி வரை சேவை மையங்களில் தெரிவித்து நிவா ரணம் பெறலாம்.
பாலிடெக்னிக் சேர்க்கை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இன்று (மே 20) முதல் தொடங்குகிறது. இதற்கான பதிவுக் கட்டணம் ரூ.150, எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை.
விருப்பமுள்ளவர்கள் www.tnpoly.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பகுதி நேர படிப்புகளில் சேரவும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 4 ஆண்டுகள் படிக்க வேண்டும்.
ஒரே கட்டணம் அமல்: பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு விதமாக விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை மாற்றப்பட்டு இனி அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஆண்டுக்கு ரூ.200மட்டுமே கட்டணம் வசூலிக்கப் படும். இதன்மூலம் பெற்றோர் களின் நிதிச்சுமை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT