Published : 17 May 2023 02:58 PM
Last Updated : 17 May 2023 02:58 PM
புதுச்சேரி: நீட் அல்லாத தொழில், கலை படிப்புகளுக்கு புதுச்சேரி, காரைக்காலில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வரும் ஜூன் 6-ம் தேதி கடைசி நாளாகும் என புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "2023-24ம் கல்வியாண்டுக்கான நீட் அல்லாத இளநிலை தொழில்படிப்புகள், இளநிலை கலை அறிவியல், வணிகம், நுண்கலை படிப்புகளுக்கான சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம். புதுச்சேரி, காரைக்கால் உட்பட அனைத்து பிராந்தியங்களிலும் இன்று தொடங்கியது.
நீட் அல்லாத தொழில்முறை படிப்புகளான பிடெக், பிஎஸ்சி வேளாண்மை, கால்நடை, நர்சிங், பிபிடி, பிபார்ம், எல்எல்பி, டிப்ளமோ, இள நிலை கலை, அறிவியல், வணிக படிப்புகளான பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ மற்றும் இளநிலை நுண்கலை படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பத்தை சமர்பிக்க ஜூன் 6ஆம் தேதி கடைசி நாளாகும்.
தொழில் படிப்புக்கு பொது பிரிவினருக்கு ரூ.1000-ம், கலை, அறிவியல், வணிக படிப்புக்கு ரூ 300ம் கட்டணம் செலுத்த வேண்டும் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுதிறனாளி மாணவர்கள் தொழில் படிப்புக்கு ரூ.500ம், கலை, அறிவியல் படிப்புக்கு ரூ.150ம் கட்டணம் செலுத்த வேண்டும். நீட் அல்லாத தொழில்நுட்பப் படிப்புகளுக்கு 5 ஆயிரத்து 229 இடங்களும், கலை அறிவியல், வணிக படிப்புகளுக்கு 4 ஆயிரத்து 320 இடங்களும், நுண்கலை படிப்புகளுக்கு 90 இடங்களும், லேட்ரல் என்ட்ரிக்கு 292 இடங்களும் உள்ளது. இது தவிர மருத்துவம், மருத்துவம் சார்ந்த நீட் மாணவர் சேர்க்கைக்கு 917 இடங்கள் உள்ளது.
பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் அல்லாத படிப்புகளுக்கு மற்ற மாநில ஒதுக்கீட்டின் கீழ் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். என்ஆர்ஐ, என்ஆர்ஐ ஸ்பான்சர், வெளி நாட்டு மாணவர்கள் சென்டாக் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தகுதியின் அடிப்படையில் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். புதுவை, பிற மாநில விண்ணப்பதாரர்கள் நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளில் சுயநிதி இடஒதுக்கீடுகளுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
அனைத்து விபரங்களும் சென்டாக் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவரிசை பட்டியல், கலந்தாய்வு அடுத்தடுத்து அறிவிக்கப்படும். காலதாமத்ததைத் தவிர்த்து ஜூன், ஜூலைக்குள் கல்லூரி முதலாண்டு தொடங்கப்படும்" என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். பேட்டியின்போது கல்வித் துறை செயலர் ஜவகர், சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT