Published : 17 May 2023 04:17 AM
Last Updated : 17 May 2023 04:17 AM
சென்னை: பள்ளி திறக்கும் முதல் நாளே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: வரும் கல்வி ஆண்டு (2023-24) 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கான பாடநூல்கள் உட்பட அனைத்து கல்வி உபகரணங்களின் தேவைப் பட்டியல் பெறப்பட்டு அதனடிப்படையில் கொள்முதல் பணிகள் முடிக்கப்பட்டன.
தற்போது அனைத்து மாவட்டக் கல்வி அலுவலக விநியோக மையங்களுக்கும் பாடநூல் கழகம் தேவையான உபகரணங்களை அனுப்பியுள்ளது. மாவட்ட விநியோக மையங்களில் பெறப்பட்டுள்ள பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இதர கல்வி உபகரணங்கள் அனைத்தும் பள்ளி திறப்பதற்கு முன்பாகவே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு பாடநூல்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.இதில் எவ்வித காலதாமதமும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT